பொள்ளாச்சியில் பொங்கல் விடுமுறை அன்று பலூன் திருவிழா

பொள்ளாச்சியில் ‘தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா’ (ஹாட் ஏர் பலூன் பெஸ்டிவல்) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் விடுமுறை நாட்களான ஜனவரி 13 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பலூன்களை மக்கள் வியப்புடன் கண்டு மகிழ நடத்தப்படும் இந்த விழாவிற்காக, பிரேசில், அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து டைனோசர், கரடி, கார்ட்டூன் வடிவிலான பலூன்கள் வந்து இறங்கிவிட்டதாகவும், இவற்றின் உயரம் சராசரி 60 அடி முதல் 100 அடி வரை இருக்கும் எனவும் தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவை (TNIBF) நடத்துவோரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் திருவிழா வருவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொள்ளாச்சியின் அழகான நிலப்பரப்பு, வியூ, தட்பவெப்பம் ஆகியவை இந்த விழா நடத்த ஏதுவாக அமைந்துள்ளது.

பொதுமக்கள் ரைடு மேற்கொள்ள சில ஏற்பாடுகள் செய்து வருவதாகவும், ஆனால், அனைத்து வயதினருக்கும் அது சாத்தியமில்லை என்றும் விழா நடத்துவோர் தெரிவிக்கின்றனர். பல கலை நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெற உள்ளன.