வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் வன்முறையைத் தூண்டினால் புகார் தரலாம்

வாட்ஸ்அப் செயலியில் புதிய வசதியை அறிமுகம் செய்கிறது மெட்டா..

கலிபோர்னியா: வாட்ஸ்அப் செயலியில் வன்முறையை தூண்டும் விதமாக ஸ்டேட்டஸ் வைத்தால் அது குறித்து வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு புகார் அளிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும் வசதியை பெரும்பான்மையானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வசதி பெருமளவில் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில், வன்முறையை தூண்டும் விதமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்கப்பட்டால் பயனர்கள் அதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு புகார் அளிக்கும் புதிய வசதியை அமைத்துள்ளது.

அத்துடன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் தனிநபர்களை தரக்குறைவாக விமர்சிப்பது, பெண்களை அவதூறாக சித்தரிப்பது போன்றவற்றில் ஈடுபட்டால் புகார் செய்யலாம் என வாட்ஸ்அப் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்திருக்கிறது.

அப்படி செய்யப்படும் புகார்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு தொடர்புடைய ஸ்டேட்டஸ் நீக்கப்படும் என்றும் மெட்டா கூறியுள்ளது. எனினும் பயனர்கள் அனுப்பும் செய்திகள், படங்கள், காணொளிகள், உரையாடல்களின் பாதுகாப்பில் வாட்ஸ்அப் உட்பட எவரும் குறுக்கிட முடியாது என்றும் மெட்டா உறுதிப்படுத்தியுள்ளது