கீதாஞ்சலி பள்ளியில் ஆண்டு விழா

குழந்தைகளின் ஆற்றலை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கம்!

– கிருஷ்ணராஜ் வாணவராயர், தலைவர் பாரதிய வித்யா பவன் கோவை. 

கோவை கொடிசியா சாலையில் அமைந்துள்ள கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியின் 10 வது ஆண்டு விழா கொண்டாட்டம் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அகாடமிக் ஹெட் சுகன்யா வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்வில் பள்ளியின் தலைவர் அழகிரிசாமி தலைமை உரை ஆற்றினார்.

பள்ளியின் தலைமையாசிரியர் கவிதா 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார். இதில் மாணவர்களின் சாதனைகளையும், பள்ளியின் செயல்பாடுகளையும் விவரித்தார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை பாரதிய வித்யா பவன் மற்றும் குமரகுரு தொழில் நுட்பக் கல்லூரியின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் கலந்துகொண்டார்.

அவர் பேசுகையில்: மாணவர்களுக்கு பள்ளிக் கூடத்தில் போடும் அஸ்திவாரம் தான் வாழ்க்கையில் காலம் முழுவதும் துணையாக வரும். மேலும், பெற்றோர்கள் தரும் ஒத்துழைப்பை பொறுத்தே ஒரு பள்ளி சிறந்ததாக அமைகிறது என தெரிவித்தார்.

பள்ளி, கல்லூரி நடத்துவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல எனக் கூறிய அவர், பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் ஆதரவு தரவேண்டும் என்றார்.

இந்த பள்ளி அருமையான உட்கட்டமைப்பை கொண்டுள்ளது. சிறந்த ஆசிரியர்கள் இங்கு உள்ளனர். இது போன்ற பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தேசத்தை நிர்வகிக்கும் பொறுப்புக்கு வருவார்கள்.

புத்தக பாடம் மட்டும் கல்வி அல்ல. அதையும் தாண்டி கற்றுக்கொள்ள வேண்டும். சுவாமி விவேகானந்தரின் கல்வி கொள்கைக்கு மேலானது எதுவும் இல்லை. அதுதான் இந்த பள்ளியிலும் பின்பற்றப்படுகிறது.

ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் மனித சமுதாயத்தில் புதிய நம்பிக்கை பிறப்பதாக ரபீந்திரநாத் தாகூர் கூறுகிறார்.

ஒவ்வொரு குழந்தைக்கும் அளவற்ற அறிவும், ஆற்றலும் உள்ளது. அதனை முழுமையாக வெளிக்கொண்டு வருவதுதான் கல்வியின் நோக்கம்.

ஒரு பள்ளியில் குழந்தைகளை சேர்த்து விட்டால் மட்டும் பெற்றோரின் பொறுப்பு முடிந்து விடாது. பெற்றோர்களின் பங்களிப்பு மாணவர்களின் நலனில் எப்போதும் இருந்து அவர்களை வழி நடத்தி செல்லவேண்டும் எனக் கூறினார்.

என்ன படித்தாலும், எங்கு சென்றாலும் நம் தேசம், நம் கலாச்சாரம் என்ற வழியிலேயே செல்லவேண்டும் என மாணவர்களிடம் அறிவுறுத்தினார்.

நல்ல குழந்தைகளை உருவாக்கி தேசத்தை மேல் எழுப்ப வேண்டும் என நிர்வாகத்தினரை கேட்டுக்கொண்டார்.

ஆண்டுவிழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இதில் மழலைகளின் கண்கவர் நடனம் பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது.

ஆண்டு விழா நிகழ்ச்சியில் கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியின் அறங்காவலர் ஜனனி, பொள்ளாச்சி விவேக் வித்யாலயா பள்ளியின் தாளாளர் பழனிசாமி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.