கொங்குச்சீமை செங்காற்று – 7

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை

– சூர்யகாந்தன்

 

ஊருக்கு வடபுறம் இருந்த தோட்டத்தை குத்தகைக்குப் பிடித்து பண்ணையம் நடத்தும் ‘புல்லட் சாமியின்’ டெம்போ தான் அது…! சாக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற அதை…

“உனி யாரை ஏமாத்தி இதுகளைப் புடுங்கிக்கொண்டுட்டுப் போறானோ?

அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும்…” என்னும் படியாக இவர்கள் பார்த்தனர்.

சோளச் சோறாக்கி தட்டைப்பயிறு குழம்பு வைத்திருந்தாள் முருகம்மா! ஒருத்தரும் கூடச் சாப்பிடவில்லை. மாசய்யன் வெளியில் எங்கோ போயிருந்தார்.

சோளச்சோறு மணந்து அடுத்த தாழ்வாரத்திலிருந்த நாகரத்தினத்துக்குப் பசியைக்கிளப்பியது. அவளுடைய புருசன் நமச்சிவாயத்துக்கு இந்த உணவு மிகவும் பிடிக்கும் என்பதை அவளும் அறிவாள்.!

“இங்கெதா வந்து ஒரு வா சோறு உண்டுட்டுப் போவியாமா..! வா!”

அம்மா அன்போடு கூப்பிடுவதை வெறுமனே மறுக்க வேண்டியிருந்தது.

“….நீங்க அங்கெபோயி  உண்டுட்டு வந்துருவீங்க. அப்புறம் நா ஆக்கி வெச்சது இங்கெ வீணாத்தானே கெடக்கும்! என்ர ஒருத்திக்கு வேண்டித்தா இத்தனைய மெனக்கெட்டு ஆக்குறேனாக்கும்…”

மனைவியின் கடிந்து கொள்ளும் போக்குக்கு அஞ்சியே மூன்று வேளையும் “செரி செய்து வெச்சிருக்கிறதைப்போடு” என வட்டிலின் முன்னால் மனமின்றி உட்காருபவனாய் இருந்தான்.

“…வருசம் முன்னூத்தருவது நாளும் அரிசிதா! இதைய வுட்டா உப்புமா…! இல்லீனா புட்டு, தோசை இதுகளையேதான் கட்டீட்டு அழுவோணும்”

மகனின் முறைச்சலை அந்தப்பக்கம் திண்ணையில் இருந்தபடி அம்மா வருத்தத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள்.

“ச் செரி அவளுக்குப் புடிச்சதுகளைத் தானொ அவ ஆக்கி வெப்பா! இங்கெ வந்து போட்டுக்கொண்டு போன்னு கூப்புட்டாலும் வரமாட்டா!”

சரிவரபுரிந்து கொண்டபோதிலும், அம்மாவால் மேற்கொண்டு எதையும் சொல்லி வம்பைச் சம்பாதித்துக் கொள்வதற்கு மனது இடங்கொடுக்கவில்லை.

தாளமாட்டாமல் ஏதாவது சொல்ல முற்பட்டாலோ…

“எனக்குக் கொழந்தையா? குட்டியா? விதவிதமாப் பண்ணி அதுகளுக்குப் பாங்கு பண்ண்றதுக்கு…!”

என்று சீத்துப் பூத்தென்று வருத்தங்களைக் கொட்டி விடுவாள்.

இந்தச் சங்கடம் நமச்சிவாயத்துக்குப் பெரிய உபத்திரமாக மாறிக் கொண்டு வந்தது. அதை நேரடியாகக் காட்டிக் கொள்ளாமல்…

“எத்தனையோ பொருளுகளெ வாங்கி ஊடு புடிக்காமக் குமுச்சு வெச்சிருக்கிறே..! இதுகளே எங்காச்சும் சீரு கொண்டுட்டுப் போறீயா..”

தனது போக்கில் குறைகண்டு இப்பிடிச் சுட்டிக்காட்டுகிறான் என்பதை அவளும் தள்ளிக் கொடுத்து, தணிந்து போகாதவளாக இருந்தாள்.

“என்னோ ரெண்டு சீலைக எச்சா இருக்கட்டுமே அப்பிடின்னு மாசச் சீட்டுகாரங்கிட்டெ எடுத்து வெச்சேன். நாம அதுக்கு ஒண்ணாவா பணம் எண்ணிக் குடுக்கப்போறோம்? ஆறு மாசத்துல சிறுகச் சிறுகச் செலுத்தி இந்த கடனெ அடச்சுப்போடுலாம். இதுங்கூட உங்களுக்கு பொறுக்கலையாட்டந் தெரியுது…”

“…சீலை துணிக இருக்கட்டும்! எத்தனை எவர்சில்வர் பாத்திரங்க..! டம்ளருக, வட்டிலுக, கிண்ணங்க? இதுகளெயெல்லாம் நாம பொழங்கப் போறமா..? கூடைச்சேர்னு, மடக்குச்சேர்னு வீதியில போறதுகளெ எதைக் கண்டாலும் கூப்புட்டு வெலக்கெரயம் பண்ணிப் போடுறே! அப்புறம் நாள் தவறாமக் கணக்குப் புஸ்தகத்தைக் கையில் புடுச்சுட்டு, பணம் வசூலுக்கு ஆளுக இங்கெ வந்த மயமா இருக்குது!

அவன் கேட்பதிலிருந்த நியாயத்தைக் குத்தலாகப் புரிந்து கொண்டு…

“…நா வாங்கினதுகளுக்குக் கடன் கட்டி நானே அடைச்சுப் போடுறேன். நீங்க இதுக்கொசரம் சத்தருசல்லுப் போடாதீங்க! உங்க வரும்படியெப் புடுங்கி நான் ஒண்ணும் சீல துணிகலெயும், போட்டி பீரோவுகளெயும் எடுத்துச் சில்லாந்தட்டி பண்ணுலே..”

“…இப்பிடியேதோ நீ பேசுவே! வாய் வார்த்தை வாயில இருக்க கோச்சைச் சேவலாட்டம் எகிறியிட்டு வர்றயே இது நல்லதுக்கானு நீயே சொல்லு..”

“நா கோச்சைச் சேவலோ, கட்டுச் சேவலோ கெடக்குது வுடுங்க! எந்துரிச்சுக் கை கழுவியிட்டு வாங்கொ! சோறு ஆறிடப் போவுது..”

“… எனக்குச் சோறும் வேண்டாம்! ஒண்ணும் வேண்டாம். ஆளெ உடு..”

கோபத்தோடு எழுந்து அங்கே நிற்காமல் போய்விட்டான்.

இந்தச்சச்சரவை அவ்வப்போது கண்டும் கேட்டும் வருபவள்தான் என்ற போதிலும் முருகம்மாளுக்கு இது வேதனையை உண்டு பண்ணத் தவறவில்லை.

“இங்கியாவது கூப்புட்டு சாப்பிட வெச்சிருக்காமப் போனமே” என மனம் அடித்துக் கொண்டது.

அப்படிச் செய்திருந்தால் மருமகளோடு சச்சரவு வந்திருக்கும்! பக்கத்து வீட்டுக்காரர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் படியாயும் ஆகியிருக்கும். அவரவர் மனத் தாங்கல்களை அவரவர்களே தாங்கிக் கொண்டு அமைதியாகிவிட்டனர். இரண்டு வீடுகளிலும் இருந்த சட்டிகளும், பாத்திரங்களும் இரண்டு வகையான உணவுகளைத் தாங்கிக் கொண்டு வைத்த இடத்திலேயே உட்கார்ந்திருந்தன.

நமச்சிவாயத்திற்க்குப் பசியை விடக் கோபம்தான் அதிகமாக இருந்தது. அரச மரத்து மேடைக்குச் சென்றான். மனம் ஒரு நிலையில் இல்லை. அங்கும் உட்காருவதற்குப் பிடிக்கவில்லை.

முன்னாலிருந்த பெட்டிக்கடையில் பீடி வாங்கிக் கொண்டு, அதைப் புகைத்தபடி நடந்தான். தொண்டை வறண்டு எரிந்தது. குரலைச் செருமி எரிச்சலைத் துப்பிவிட்டு ஊரின் தென்புறமிருந்த பஸ் ஸ்டாண்டுப் பக்கம் சென்றான்.

பணம் அவனுக்கு வர வேண்டியிருந்தது. தர வேண்டியவர்கள் வர வில்லை. வட்டிக்குப் பணத்தைக் கொடுத்து அதை வசூலிப்பதில் இருக்கும் சிரமங்களை எண்ணியவாறு எதிர்த் திசையை வெறித்தான்.

கண்ணுக்கெட்டிய தூரத்தில், சிறப்புக் காவல் படையில் சேர்ந்து பயிற்சி பெறுபவர்கள் தங்கியிருக்கும்  கட்டிடங்கள் தெரிந்தன. எங்கெங்கோ தூரம் தொலைவுகளில் இருந்து வந்து இங்கு பயிற்சி பெறுகிறார்கள் என அறிந்திருந்தான்.

கோயம்புத்தூர் நகரத்தை விட்டு விலகி ஏற்றதொரு பகுதியாக இதைத் தேர்வு செய்து இங்கே சிறு நகரம் ஒன்றை நிர்மானிப்பதர்க்குற்ய தொடக்க முயற்சியாக இது இருப்பது அக்கம் பக்கத்தாரெல்லாம் பேசிக் கொள்வதில் இருந்து விளங்கியது.

ஓரம் பாறம் இருந்த நிலங்கள்தான் இன்னமும் பாக்கியாய்க் கிடப்பது போல் தெரிந்தது. மையப் பகுதிகள் பெரும்பாலும் விற்பனையாகியிருந்தன. நாலைந்து குடியானவர்கள் தான் இன்னமும் விலை கூடி வருமென்று நப்பாசையோடு அதை விட்டுவைத்திருந்தனர்.

“…இந்த அய்யனைச்சரிகட்டி இதுக்குள்ளாறவே வித்திருந்தாலாவது கையில் காசு சேர்ந்திருக்கும்..! அவரெங்கே சாமானியப்பட்ட ஆளா? எதுக்கும் மசியிவனாங்கிறாரு..”

மனதில் எண்ணங்கள் பலவாறாகத் தோன்றி அலைக்கழித்தன! வானம் மூட்டம் போட்டிருந்தது. திட்டுத்திட்டாக மேகங்கள் பரவிக் குவிந்திருந்தன. தெற்கிலிருந்த மலைகள், மேகங்களை இழுத்துப் போர்த்திக்கொண்டு உட்கார்ந்திருப்பது போல் தோணியது.

(தொடரும்)