துணை தாசில்தார்களுக்கு தற்காலிக பதவி உயர்வு – கோவை ஆட்சியர் உத்தரவு

கோவையில் துணை தாசில்தார்களுக்கு தற்காலிக பதவி உயர்வு வழங்கி மாவட்ட சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் பணிபுரியும் தாசில்தார்கள் சிலர், நீதித்துறை நடுவர் பயிற்சிக்கு சென்றிருப்பதால் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்த துணை தாசில்தார்களுக்கு தற்காலிக பதவி உயர்வு மற்றும் தாசில்தார் பணியிடம் வழங்கி, மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மதுக்கரை வட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ரேணுகாதேவி, ஆனைமலை தாசில்தாராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு, நில எடுப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த தனி தாசில்தார் ராஜா நகர்ப்புற நிலவரி வசூல் தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட நுகர்வோர் மற்றும் பாதுகாப்பு அலுவலக தலைமை உதவியாளர் கணேஷ் பாபுவுக்கு, தற்காலிகமாக தாசில்தார் பதவி உயர்வு வழங்கப்பட்டு, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மதுக்கரை தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் சத்தியன், விமான நிலைய விரிவாக்கம் அலகு-2 தனி தாசில்தாராகவும், இப்பணியில் இருந்த விஜயலட்சுமி, கோவை கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு தாசில்தாராகவும் மாற்றப்பட்டிருக்கிறார். அன்னுார் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணக்குமார், கோவை தெற்கு நகர நிலவரி திட்ட தனி தாசில்தாராகவும், மதுக்கரை தாலுகா தனி துணை தாசில்தார் தேர்தல் பிரிவு ரமேஷ்குமார், அன்னுார் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், அன்னுாரில் பணிபுரிந்த சகுந்தலாமணி, பேரூர் தாலுகா தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதவி உயர்வை தவிர்க, விடுப்பில் சென்றாலோ அல்லது பணியில் சேர காலம் தாழ்த்தினாலோ, சம்மந்தப்பட்ட அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.