5ஜி சேவை வழங்க இந்தியாவில் 20,980 செல்போன் கோபுரங்கள் – மத்திய அரசு தகவல்

5 ஜி சேவை கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி இந்தியாவில் தொடங்கப்பட்டது. தற்போது 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் இந்த சேவையானது அமலில் உள்ளது.

இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய 2 நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சேவையை தற்போது வழங்கி வருகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனமும் இந்த சேவையை விரைவில் தொடங்க இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 50 நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படுகிறது. அதில், 33 நகரங்கள் குஜராத்தில் மட்டுமே உள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 2 நகரங்களும், மகாராஷ்டிராவில் 3 நகரங்களிலும் 5 ஜி சேவை பயன்பாட்டில் இருக்கிறது. டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஹரியானா, அசாம், கேரளா, பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களில் தலா ஒரு இடத்தில் மட்டுமே 5ஜி சேவை இருக்கிறது. மேலும் தமிழகத்தில் சென்னையில் மட்டுமே 5ஜி சேவை உள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில், நவம்பர் 26-ஆம் தேதி வரை, நாட்டின் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 5 ஜி சேவை வழங்குவதற்காக இதுவரை 20,980 செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர்பு இணை அமைச்சர் தேவுசிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இதில் அதிகபட்சமாக டெல்லியில் 5,829 செல்போன் கோபுரங்களும், மகாராஷ்டிராவில் 4,051 செல்போன் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு சராசரியாக 2500 செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.