வாழ்த்தும் வேண்டுகோளும்…

தமிழக அமைச்சரவையில் சமீபத்தில் சில மாற்றங்கள் நடைபெற்று இருக்கின்றன. கூடவே புதிதாக ஒரு அமைச்சரும் பதவியேற்று இருக்கிறார். திமுக இளைஞரணி செயலரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும், முதல்வரின் புதல்வருமான உதயநிதி இளைஞர் நலன், விளையாட்டு துறை சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் ஆகிய துறைகளின் அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார்.

வழக்கம்போல இது குறித்த வாத, பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவரும் அதற்கு ஏற்ற வகையில் எனது செயல்பாடுகள் இவற்றுக்கான பதிலாக அமையும் என்று பதில் அளித்திருக்கிறார். இது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் ஒரு தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் என்று அறிவித்திருப்பது பாராட்டுக்கும் வரவேற்புக்கும் உரியது. ஒரு இளைஞர் இந்த துறையில் அமைச்சராக மாறி பொறுப்பேற்று இருப்பது சிறப்புக்கும் வாழ்த்துக்கும் உரியது. இந்த நேரத்தில் சில வேண்டுகோள்களையும் முன்வைக்க வேண்டிய நிலை உள்ளது.

முன்பிருந்ததை விட நவீன தொழில்நுட்பம், அதிக வருமானம், கல்வி முறை காரணமாக இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வம் குறைந்து வருவதை நேரடியாக காண முடிகிறது. இது கண்டிப்பாக நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்கால சமுதாயத்தை பாதிக்கும். பொதுவாக காலால் நடப்பது என்ற குறைந்தபட்ச உடற்பயிற்சி கூட இல்லாமல் பெரும்பாலான இளைஞர்கள் இருக்கிறார்கள். மாறிவரும் உணவு பழக்க வழக்க முறைகளும், சத்தற்ற நவீன சக்கை உணவுகளும் உடல்நலனை காப்பதில்லை.  இவற்றை பெரும்பாலான பெற்றோர்களும் வலியுறுத்துவதில்லை.  ஒரு நாட்டின் உண்மையான சொத்து என்பது அதன் மக்கள் தான், குறிப்பாக இளைஞர்கள் தான்.  அவர்கள் உடல் நலமுடன் இருந்தால்தான் இது உண்மையாகும்.

இன்னொரு புறம் போதை மருந்து, கஞ்சா போன்ற பொருட்களை பயன்படுத்துவது, குடிப்பழக்கம் போன்றவையும் மெல்ல மெல்ல இளைஞர்களிடையே வேரூன்றி வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்களை சொல்லலாம். அதைப் போலவே இதற்கு தடுப்பு நடவடிக்கைகளையும் சொல்லலாம். ஆனால் அதைவிட விளையாட்டை ஊக்குவிப்பதன் மூலம் இளைஞர் நலன் வெகுவாக காக்கப்படும் என்பது உறுதி. மேலும் எந்த ஒரு விளையாட்டு வீரரும் தனது உடல் நலனில் கண்டிப்பாக அக்கறை செலுத்துவார் என்று நம்பலாம்.  இந்த வழி கண்டிப்பாக இயல்பான மாற்று வழியாகும். இந்த நிலையில் குழந்தைகள் தொடங்கி முதியோர் வரை ஈடுபடும் அனைத்து வகை விளையாட்டுகளையும் அரசு உருவாக்கி வைக்க வேண்டும். இதில் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் என சில வேறுபாடுகளும் குறைபாடுகளும் உள்ளன. அந்த வேறுபாடுகளையும் குறைபாடுகளையும் களைந்து அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் மற்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இருவருமே உடல் நலனை பேணுவதில் மிகுந்த அக்கறை உடையவர்கள். மாரத்தான் போட்டிகள் போன்றவற்றில் பங்கெடுத்து கொள்பவர்கள். அந்த வகையில் மாவட்டம் தோறும் தமிழகம் முழுவதும் இந்த மாரத்தான் போட்டிகளை நடத்தலாம். எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச அளவிலான மாரத்தான் ஒன்றை சென்னையில் நடத்துவதற்கு முன் முயற்சி எடுத்து செயல்படுத்த வேண்டும்.

கூடவே பெண்களுக்கான விளையாட்டு துறை வாய்ப்புகளையும் அதிகரிக்க வேண்டும். இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மாநில அரசு விருது வழங்குவது போல தமிழக அளவிலும் பயிற்சியாளர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் (இந்தியாவின் அர்ஜுனா, கேல்ரத்னா போன்ற விருதுகள் போல) தகுந்த விருது உருவாக்கி வழங்கப்பட வேண்டும். அதைப்போலவே தொழில்துறையில் சிறந்த மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் விளையாட்டு உபகரணங்கள், சாதனங்கள் தயாரிக்கும் தொழில்களை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

பஞ்சாப் மாநிலம் போல இங்கும் பல வகையான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கருவிகள், சாதனங்கள் உற்பத்தி செய்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.

இவை எல்லாம் எதிர்கால தலைமுறைக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை வழங்கிய கொடையாக மாறும். புதிய அமைச்சராக இருந்தாலும் மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர் என்ற முறையில் ஆர்வமும், ஆற்றலும் கொண்டுள்ள உதயநிதி அவர்களுக்கு வாழ்த்துக்களோடு மேற்கண்ட வேண்டுகோள்களையும் வைக்கின்றோம்!