உடலை எப்படி நன்றாக வைத்துக்கொள்வது?

லேப்டாப், ஐ பேட் போன்ற தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்ட இக்காலத்தில், முன்பு போல் உடலைப் பயன்படுத்தி வேலை செய்வது பலருக்கும் குதிரைக் கொம்பான விஷயம்தான். இப்படி இருக்க நம் உடலை நாம் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை சத்குரு சொல்கிறார்.

“உடல் என்றாலே வலிதான்” என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள். உடல் என்றால் வலி இல்லை. உடல் மிக உன்னதமாக இருக்க முடியும். உங்களுடைய உடல் எப்படி இருக்க வேண்டும் என்றால், அதை இங்கும் அங்குமாக எடுத்து செல்லாமல், உங்களுடன் அது மிதந்து வர விடவேண்டும். உணவு, பழக்க வழக்கம், மற்றும் மனநிலையில் சிறிய மாற்றத்தை கொண்டு வந்தால், இந்த உடல் அதிசயம் ஆவதை நம்மால் உணரமுடியும்.

நீங்கள் உடலை ஒரு செயல் முறையாக பார்த்தால், நிச்சயமாக, பிரபஞ்சத்திலேயே, மிக நுட்பமானது உடல் என்பது புரியும். உலகில் உள்ள அனைத்து சூப்பர் கணினிகள் கூட இதை ஈடு செய்ய முடியாது. உலகில் உள்ள அனைத்து கணினிகள் செயல்படுவதை விட ஒரு உயிரணு, நூறு மடங்கு அதிக செயல்பாடுகளை செய்ய முடியும். நுண் உயிரணு பல செயல்பாடுகளை கொண்டுள்ளது. எனவே, உடலானது நிச்சயமாக ஒரு சிறந்த இயந்திரம்.

உடல் உங்களுக்கு கிடைத்த முதல் பரிசு. யார் உங்களை படைத்தாரோ, அவர் இந்த அற்புதமான உடலை உங்களுக்கு கொடுத்தார். உங்களுக்கு கிடைத்த முதல் பரிசை, ஒழுங்காக பயன்படுத்தவில்லை என்றாலோ, அதை எப்படி கவனித்து கொள்ளவேண்டும் என்று தெரியவில்லை என்றாலோ, மேலும் பரிசுகளை பெறக்கூடிய தகுதி உங்களுக்கு இல்லை என்று அந்த படைத்தவருக்கு தெரியும். அதனால், உடலை சுகமான மற்றும் ஆனந்தமான நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். உடல் மகிழ்ச்சியாக இருந்தால்தான், அடுத்த நிலைக்கு செல்ல ஊக்குவிக்கும்.

உடலை நன்றாக, ஆரோக்கியமாக, ஆனந்தமாக, வைத்து கொள்ள நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக ஆக தேவை இல்லை. உடலை மகிழ்ச்சியாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இல்லையெனில், அது ஒரு தடங்கலாக இருக்கக் கூடும். நல்ல மழை பொழிந்த பின் வெளியே சென்று பார்த்தால், அனைத்து செடிகளும் மகிழ்ச்சியாக இருப்பது தெரியும். கழுவி, சுத்தமாக இருப்பது மட்டுமில்லாமல், அவை ஆனந்தத்தை வெளிப்படுத்துவதையும் நீங்கள் உணர முடியும். பொருள் தன்மை கொண்ட உடலும் அப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஆகையால், உடலை சரியாக வைத்துக்கொண்டால், ஆனந்தமாக இருக்கும். நீங்கள் குறிப்பிட்ட உணவை உண்டால், உடல் சுறுசுறுப்பாக இருக்கும். வேறு சில உணவை சாப்பிட்டால், மந்தமாகவும், சோம்பேறித்தனமாகவும் இருப்பதோடு, உங்கள் தூக்கத்தையும் அதிகரிக்கும். நாம் இங்கு தூங்கிவிட்டு போவதற்கு வரவில்லை. உயிருடன் இருப்பது பற்றித்தான் பார்க்கிறோம்.

ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்கினால், அறுபது ஆண்டு வாழ்க்கையில் இறுபது ஆண்டுகள் தூக்கத்தில் போய்விடும். அதாவது, நமது வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் கழிகிறது.

மீதமுள்ள முப்பது நாற்பது சதவிகிதம், உணவு, கழிப்பறை, குளிப்பதில் செல்கிறது. அப்படியென்றால், உண்மையில் வாழ்வதற்கு நேரமே இல்லை. தூக்கத்தை எவரும் அனுபவிக்க முடியாது. தூக்கத்தில் நீங்கள் இல்லை. ஓய்வெடுத்தால் மட்டும் தான் அனுபவிக்க முடியும். உடல் ஓய்வெடுத்தால், நீங்கள் ஆனந்தமாக இருக்க முடியும்.

எப்படி உடலை நன்றாக ஓய்வெடுக்க வைப்பது? முதலில் அது ஏன் சோர்வடைய வேண்டும்? பெரும்பாலான மக்களுக்கு வேலை செய்வதால் உடல் சோர்வடைவதில்லை.

வேலை அதிகமாக செய்யும் மக்கள், சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறார்கள். உணவு, அணுகுமுறை ஆகியவற்றில்தான் மாற்றம் தேவை. இதில் உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான வகை உணவை உட்கொண்டால், உடல் கனத்து இருக்கும், சரியான வகை உணவை உட்கொண்டால், உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். அப்படித்தான் உடலை வைத்து கொள்ள வேண்டும்.