‘வானமே எல்லை’: மாணவர்களின் கனவை நினைவாக்கிய விமான பயணம்

ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு சத்யபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து “வானமே எல்லை” என்ற ஒரு நாள் விமான பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில், சேவாலயா, ஆனந்தம், செஸ் உள்ளிட்ட இல்லங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 26 குழந்தைகள், இன்று காலை 11.00 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் மீண்டும் கோவையில் இருந்து சென்னைக்கு ரயிலில் அழைத்து செல்லப்படுகின்றனர்.

இதில் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவரும், ஒரு திருநங்கை மாணவியும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு அண்மையில் சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் ஒரு ஆய்வு நடத்தியது. அங்கு வசிக்கும் பல குழந்தைகளுக்கு தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்பது ஆவலாக இருந்தது. அத்தகைய குழந்தைகளின் கனவை நனவாக்க ரெயின்ட்ராப்ஸ் அமைப்பானது, சத்யபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து “வானமே எல்லை” என்ற ஒரு நாள் பயணத்திற்கு ஏற்பாடு செய்தது.

கோவைக்கு விமானம் மூலம் வந்த மாணவர்களை விமான நிலையத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இந்த மாணவ மாணவியர்கள் கோவை அறிவியல் மையம், ஜி டி நாயுடு அருங்காட்சியகம் மற்றும் ஐ லவ் கோவை ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.

விமான பயணத்தில் இயற்கை அறிவியல் ஆய்வாளரும் மாநில திட்டக்குழு உறுப்பினருமான சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், பிரபல பாடகர்களும் சின்னத்திரை நட்சத்திரங்களுமான சிவாங்கி, சாம் விஷால், ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் குழந்தைகளுடன் பயணித்தனர்.