குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு விவரங்களைப் பெற முடியாமல் கூட்டுறவுத் துறை திணறல்

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுத் துறை சார்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவையில் 33 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களைப் பெற முடியாமல் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர். வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஆதார் எண்ணை இணைத்து அதற்கான விவரங்களை நியாய விலைக் கடைகள் மூலம் சமர்ப்பிக்க கூட்டுறவுத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் ராஜேந்திரன் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவா்களில் 3,100 பேருக்கு மட்டும் வங்கிக் கணக்கு இல்லாமல் இருந்தது. அவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, ஆதார்எண் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தனர். இவர்களில் 53 ஆயிரத்து 922 பேரை தொடர்புகொண்டு தெரிவித்ததன் அடிப்படையில் ஆதார் எண்ணை இணைக்க அதற்கான ஆதாரங்களை வழங்கியுள்ளனர்.

ஆனால், இறந்தவர்கள், தவறான முகவரி அளித்தவர்கள், வெளியூர் குடிபெயர்ந்தவர்கள் உள்பட 33 ஆயிரம் பேர் விவரங்களைப் பெற முடியவில்லை. இவர்களில் ஒரு சிலர் விவரங்களைத் தர மறுக்கின்றனர். அரசின் திட்டத்துக்காக கேட்கப்படும் தகவல்களை அனைவரும் தவறாமல் அளிக்க வேண்டும்.

எனவே, இதுவரை வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ள 33 ஆயிரம் பேரும் ஆதார் எண்ணை இணைத்து அதன் விவரங்களை நியாய விலைக் கடை பணியாளர்களிடம் அளிக்க வேண்டும் என்றார்.