உலகின் முதல் செயற்கை கருப்பை வசதி

தாயின் கருவறை போலவே செயற்கையாக உருவாக்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பு (WHO) சுமார் 300,000 இறப்புகள் கர்ப்ப சிக்கல்களால் ஏற்படுவதாக தெரிவிக்கிறது.  தம்பதிகளின் கருத்தரிப்பு விகிதங்கள் குறைவதால் குழந்தை பெற்றுக்கொள்ள மாற்று வழிகளை தேடி செல்கின்றனர். வாடகை தாய், செயற்கை கருவூட்டல், என்று அறிவியல் வளர்ச்சியில் பல மகப்பேறு முறைகள் உருவாகி வருகின்றன.

இந்நிலையில் EctoLife எனும் பெர்லினை தளமாகக் கொண்ட நிறுவனம் உலகின் முதல் செயற்கை கருப்பை முறையில் குழந்தையை உருவாக்கி வளர்க்கும் முறையை அறிமுகப்படுத்துகிறது.

தாயின் கருவறை போலவே செயற்கையாக உருவாக்கப்படும் இந்த கருப்பை வசதி மூலம் ஒரு வருடத்திற்கு 30,000 குழந்தைகளை உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

அதில் மலட்டுத்தன்மையுள்ள பெற்றோருக்கு குழந்தைகளை கருத்தரிக்கவும், உண்மையான உயிரியல் பெற்றோராக அவர்கள் மாறவும் இந்த வசதி உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலான அற்புதமான அறிவியல் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு  ஹஷேம் அல்-கைலி  என்ற அறிவியலாளர் உருவாக்கிய இந்த நிறுவனத்தில் செயற்கையான கருப்பை  அமைப்பை உருவாகியுள்ளது.

புற்றுநோய் மற்றும் பிற சிக்கல்களால் கருப்பையை இழக்கும் பெண்களுக்கு EctoLife ஒரு தீர்வாக மாறும் என்று அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

தாயின் கருப்பையில் இருக்கும் திரவத்தை போலவே இதிலும் செயற்கையான திரவம் நிரப்பப்பட்டு அதில் கருவை வளர்க்கின்றனர். வளரும் கருவிற்கு செயற்கை தொப்புள்கொடி மூலம் செறிவூட்டப்பட்ட சத்துக்களை அனுப்புகின்றனர்.மேலும் குழந்தையின் கழிவுகளையும் வெளியே எடுத்து புதுப்பித்து பயன்படுத்துகின்றனர்.

தம்பதிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட கருவை ஒரு செயற்கை கருப்பையில் பொருத்துவதற்கு முன்பு மரபணு ரீதியாக அதை திருத்தி வடிவமைக்கும் வசதியை அளிக்கிறது.

குழந்தையின் புத்திசாலித்தனம், உயரம், வலிமை, முடி, கண் நிறம் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து அதன் படி உருவாக்குவது, மேலும், மரபணு நோய்களை இந்த மரபணு திருத்தம் மூலம் தவிர்க்கலாம் என்கின்றனர்.