அகவிலைப்படி வழங்காததை கண்டித்து குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கடந்த 9 மாதங்களாக அகவிலைப்படி நிறுத்தி வைத்திருப்பதை கண்டித்து ஓய்வூதியர்கள் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9 மாதங்களாக அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், 3 மாதங்களாக அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் தமிழகம் முழுவதிலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 9 ஆயிரம் ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெர்வித்த அவர்கள், அரசு உடனடியாக நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து ஓய்வூதியர் புஷ்பவள்ளி கூறுகையில், கடந்த 33 ஆண்டுகளாக குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்துள்ளேன். கோவையை பொறுத்தவரை சிறுவாணி உட்பட ஏகப்பட்ட குடிநீர் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். இப்போது கோவையில் குடிநீர் பஞ்சமே இல்லை. ஆனால் எங்களுக்கு ஓய்வூதிய அகவிலைப்படி வழங்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் ஓய்வூதியர்கள் உள்ளனர். இதில் 4 ஆயிரம் பேர் அடிப்படை ஊழியர்களாக பணிபுரிந்தவர்கள். தமிழக அரசு உடனடியாக நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்றார்.