கோவையில் 720 பேருக்கு ரூ.4.53 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவை அடுத்த சொக்கனூர் கிராமத்தில் இன்று நடைபெற்ற மக்கள்தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு 720 பயனாளிகளுக்கு ரூ.4.53கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசியதாவது: ஒரு கிராமத்திற்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றதோ, அந்த தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கின்ற வகையில்தான் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. மேலும், இன்று இம்முகாமில் வழங்கப்பட்டுள்ள மனுக்கள் மீது உரிய காலத்தில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், இம்முகாமில், வருவாய்த்துறையின் சார்பில் முதலமைச்சரின் விபத்து நிவாரணம் நிதியின் கீழ் 1 நபருக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் நிவாரண நிதியும், 168 பயனாளிகளுக்கு ரூ.20.61 லட்சம் மதிப்பில் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 109 பயனாளிகளுக்கு ரூ.1.01 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களும், வேளாண்மைத் துறையின் சார்பில் 9 விவசாயிகளுக்கு ரூ.5.99 லட்சம் மதிப்பில் மானிய உதவித்தொகைகளும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.54,700 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 109 திட்டப்பணிகளுக்கு ரூ2.95 கோடி மதிப்பில் நிர்வாக அனுமதி ஆணைகளும், மகளிர் திட்டம் சார்பில் 6மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.12.20 லட்சம் மதிப்பில் சமுதாய முதலீடு நிதி மற்றும் வங்கி கடனுதவிகளும் வழங்கப்படுகிறது.

மேலும், சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பில் வைப்பு பத்திரமும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 52 பயனாளிகளுக்கு ரூ.2.53 லட்சம் மதிப்பில் சலவைப்பெட்டி மற்றும் தையல் இயந்திரங்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.5,480 மதிப்பில் தையல் இயந்திரத்தையும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.3.30 லட்சம் மதிப்பில் வங்கி கடன் உதவிகளையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 22 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் வங்கி கடன் உதவிகளும், 24 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் 720 பயனாளிகளுக்கு ரூ.4.53 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.

ஜக்கார்பாளையம் பகுதியை சேர்ந்த சம்பத்குமார் என்ற இளைஞர் பொறியியல் துறையில் முனைவர் பட்டம்பெற்று இயற்கை வேளாண்மை முறையில் விவசாயத்தை சிறப்பாக மேற்கொண்டுவருவதற்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவரைப் போன்ற ஆர்வமுள்ள இளைஞர்கள் கிராமத்தில் உருவாகவேண்டும். மேலும், இப்பகுதியை சேர்ந்த நந்தகுமார் மற்றும் அவருடைய மகள் ஸ்ரீநிதி தங்களுடைய 58.5 சென்ட் நிலத்தை ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனைக்காக வழங்கி உள்ளார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனப் பேசினார்.