இந்துஸ்தான் மாணவர்கள் எலக்ட்ரிக் வாகன திறன் போட்டியில் சாதனை

அகில இந்திய அளவில், பஞ்சாபில் உள்ள லவ்லி தொழில்முறை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற எலக்ட்ரிக் வாகன திறன் வடிவமைப்பு போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.

முன்னதாக இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி, இந்துஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் சரசுவதி கண்ணையன் மற்றும் நிர்வாக செயலாளர் பிரியா சதிஷ்பிரபு ஆகியோர் நிகழ்வைத் தொடங்கி வைத்தனர்.

தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியின் முதல்வர் ஜெயா, இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் நடராஜன் வரவேற்புரை வழங்கி கருத்தரங்கை துவக்கி வைத்தனர்.

‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கோவை ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் கவிதாசன் கலந்து கொண்டு, சாதனையாளர்களைப் பாராட்டி, மாணவர்கள் எந்த கவனச்சிதறலும் இல்லாமல் உயரத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், சிறப்பு விருந்தினர் கவிதாசன், இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் சரசுவதி கண்ணையன், தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், கல்லூரி முதல்வர் ஜெயா மற்றும் டீன் மகுடேஸ்வரன் ஆகியோர் தேசிய அளவில் பஞ்சாபில் உள்ள லவ்லி தொழில்முறை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொழில் நுட்ப வகையிலான எலக்ட்ரிக் வாகன திறன் வடிவமைப்பு போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் மற்றும் இயந்திரவியல் துறை பேராசிரியர் ராஸ் மேத்யூ அகியோரை பாராட்டி கௌரவித்தனர்.

இந்த வாகனங்களை உருவாக்க கல்லூரி நிர்வாகம் ரூ. 4 லட்சம் நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்தியது. மேலும் ஏ.ஐ.சி.டி.இ நிதி உதவியுடன் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஐடியா ஆய்வுகூடம் மற்றும் இயந்திரவியல் துறை, மின் மற்றும் மின்னியல் துறை, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறை ஆய்வுகூடங்களில் உள்ள வசதிகளை பயன்படுத்தி மாணவர்கள் இந்த வாகனங்களை உருவாக்கினர்.

5 விருதுகளை வென்ற இந்துஸ்தான் அணி

பஞ்சாபில் உள்ள லவ்லி தொழில்முறை பல்கலைக்கழகத்தில் ‘SAE EFFICYCLE 2022’ என்ற எலக்ட்ரிக் வாகன திறன் வடிவமைப்பு போட்டியின் நிகழ்வுகள் நடத்தப்பட்டது. இதில் எஃபி கியூ டைனமிக் முதல் ரன்னர் அப் விருது, அட்வான்ஸ் சிறந்த வடிவமைப்பு விருது, சிறந்த வாகன அழகியல் விருது, கன்வென்சனல் சிறந்த வாகன அழகியல் விருது, டைனமிக் முதல் விருது ஆகிய பிரிவுகளில் கன்வென்சனல், அட்வான்ஸ் மற்றும் குவாட் ஆகிய 3 வகையான தொழில்நுட்ப பிரிவுகளிலும் சிறந்த கட்டமைப்புகளை கொண்ட வாகனங்களை உருவாக்கியதன் மூலம் இந்துஸ்தான் அணிகள் 5 விருதுகளை வென்றனர். இது நாடு முழுவதும் உள்ள பல்வேறு அணிகளில் தேசிய அளவிலான சாதனையாகும்.