சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இருசக்கர வாகனத்தில் 7000 கிமீ பயணம்

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இருசக்கர வாகனத்தில் கோவையில் துவங்கி நேபாளில் உள்ள காத்மண்டு வரை 14 நாட்களில் 7000 கிமீ பயணம் செய்யும் குழுவினர்.

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ரோட்டரி கிளப்ஸ் ஆஃப் கோயம்புத்தூர் ரீஜன் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் இரு சக்கர வாகன பிரச்சார பயணத்தை தொடங்கினர்.

இதனை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பயணமானது 6 இருசக்கர வாகனங்களில் கோவையில் துவங்கி நேபாளில் உள்ள காத்மண்டுவில் முடிவடைகிறது. இதற்காக 14 நாட்களில் 7000 கிமீ பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேசிய ரைடர்கள், தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக செயலி மூலம் பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேபாள் வரை செல்கிறோம். செல்லும் வழியில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திச் செல்வதாக கூறினர்.