பந்திப்பூர் அருகே லாரி மோதி பெண் யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் முதுமலை அடுத்த பந்திப்பூர் – முத்தங்கா சாலையில் நேற்றிரவு அதிவேகமாக சென்ற லாரி மோதி பெண் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. யானை சாலையை கடக்க முயன்ற போது விபத்துக்குள்ளானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கோவையை சேர்ந்த தமிழ்நாடு பதிவு எண் கொண்ட காலி லாரி, கேரளாவில் இருந்து சரக்குகளை இறக்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​குண்டலுப்பேட்டை சப் டிவிஷன், மடூர் ரேஞ்சில் சாலையைக் கடந்த யானை மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே யானை இறந்தது.

லாரியை பறிமுதல் செய்து டிரைவர், கிளீனரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் மீது வனவிலங்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வன விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பந்திப்பூர் புலிகள் காப்பக பகுதியில் கனரக வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இரவு 7.45 முதல் 8 மணி வரை நடந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். யானைக்கு சுமார் 20 முதல் 25 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது.

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் வன பாதுகாவலரும் கள இயக்குனருமான டாக்டர் பி ரமேஷ் குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். உயிரிழந்த யானையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை புதன்கிழமை காலை 11 மணியளவில் செய்யப்பட்டது.