ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நிறைவு

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றுள்ளது.

பொள்ளாச்சி வனக்கோட்டதிற்குட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, டாப்சிலிப் ஆகிய 4 சரகங்களில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை கால வன விலங்கு கணக்கெடுப்பும், டிசம்பர் மாதத்தில் குளிர்கால கணக்கெடுப்பு பணியும் நடத்தப்படும்.

இந்த நிலையில், கடந்த 6ம் தேதி முதல் குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவங்கியது. சுமார் 48,617 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த வன கோட்டத்திற்குட்பட்ட பகுதியில், வனவர் மற்றும் வனக்காவலர், வேட்டை தடுப்பு காவலர், இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட குழுவினர் தனித்தனியாக பிரிந்து சென்று கணக்கெடுப்பு நடத்தினர்.

8 நாட்கள் நடந்த குளிர்கால வன விலங்கு கணக்கெடுப்பு பணி நேற்று நிறைவடைந்தது. தற்போது, தனித்தனியாக கணக்கெடுக்கப்பட்ட மாமிச உண்ணி மற்றும் தாவர உண்ணி விலங்குகளின் எண்ணிக்கை குறித்து ஆன்லைனில் பதியும் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.