கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு கைதிகள் புழல் சிறைக்கு மாற்றம்

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் (வயது 28) என்ற வாலிபர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபின் கூட்டாளிகள் முகமது அசாருதீன், அப்சர் கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருவதால் இவர்கள் அடிக்கடி சென்னை அழைத்து வரப்பட்டு என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். கோவையில் இவர்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் தற்போது முடிந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஜமேஷா முபின் கூட்டாளிகள் அசாருதீன், அப்சர்கான் உள்பட 6 பேரையும் நேற்று காலை 11 மணிக்கு வேனில் ஏற்றி சென்னை புழல் சிறைக்கு கொண்டு வந்தனர். இதற்கான நடவடிக்கையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கொண்டனர். இனி புழல் சிறையில் இருந்து என்.ஐ.ஏ. கோர்ட்டுக்கு அடிக்கடி கொண்டு செல்ல இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் கடந்த வாரம் கைதான தவ்பீக் உள்பட மேலும் 3 பேர் ஏற்கனவே புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜமேஷா முபின் கூட்டாளிகள் மொத்தம் 9 பேர் புழல் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.