உதயநிதி ஸ்டாலினுக்கு தயாராகும் புதிய அமைச்சர் அறை

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக உள்ள நிலையில், அவருக்கு தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் அமைச்சர் அறையை தயார் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார் உதயநிதி.
கட்சியிலும் திமுக. இளைஞரணி செயலாளராகவும் அவர் உள்ளார்.

தொகுதியில் நல்ல பெயர் எடுத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்டால் தமிழக மக்கள் அனைவருக்கும் சேவையாற்றுவார் என சில அமைச்சர்களும், திமு.கவினரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்ற உறுதியான தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் அவரை அமைச்சராக்க தமிழக ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதனை ஆளுநரும் ஏற்றார்.

இதனையடுத்து நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதில் கலந்துகொள்வதற்காக 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறையை வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் தமிழக அமைச்சரவை விரிவாக்கப்பட்டு புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இணைகிறார். இந்தநிலையில் அவருக்கு தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் அமைச்சர் அறையை தயார் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அங்குள்ள 2 வது தளத்தில் அமைச்சர்கள் பொன்முடி, சக்கரபாணி அறைகளுக்கு அருகே அறை தயார் செய்யப்பட்டு வருகிறது.

உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்படும் அறையை கடந்த 2 நாட்களாக 50 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இணைந்து தயார் செய்து வருகின்றனர். இந்த பணியை செய்வதற்கு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டு உள்ளது.

இரவு, பகலாக பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது. அவரது அறைக்கு வெளியே தொங்கவிடப்படும் பெயர்ப்பலகையை தயார் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் முதல் முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது 2-வது முறையாக மாற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.