கோவை பூம்புகார் விற்பனையகத்தில் ‘மெய்நிகர் காட்சி’அறிமுகம்: இனி வீட்டில் இருந்தே பொருள் வாங்கலாம்!

கோவை பெரியகடை வீதி, பூம்புகார் விற்பனையகத்தில் சிலைகள், ஓவியங்கள், பூஜைப் பொருட்கள், சிற்பங்கள் உள்ளிட்ட கைவினைக் கலைஞர்கள் கொண்டு செய்யப்படும் பொருட்கள் விற்கப்படுகின்றன.

இந்நிலையில் முதல்முறையாக தற்போது இங்கு வாடிக்கையாளர்களின் வசதிக்காக ‘மெய்நிகர் கைவினைக் கண்காட்சி’ முறையிலான பொருட்கள் விற்பனை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இங்கு நேரில் வரமுடியாத வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் வாங்க விரும்பும் பொருட்களை மெய்நிகர் காட்சி மூலம் பார்த்தே வாங்கலாம். இதன் மூலம் தற்போது பஞ்சலோக சிலைகள், பித்தளை சிலைகள், விளக்குகள், கற்சிலைகள், தஞ்சை ஓவியங்கள், மரச் சிற்பங்கள், பர்னிச்சர் பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.

வாடிக்கையாளர்கள் இந்த விற்பனையகத்தை தொடர்பு கொள்ளும் பட்சத்தில், அவர்களது இடத்துக்கு ‘மெய்நிகர் கைவினை கண்காட்சி’ கருவிக் கட்டமைப்புகளுடன் சென்று, ஹெட் கியர் எனப்படும் கண் கருவி வாடிக்கையாளர்களுக்கு அணிவிக்கப்படுறது.

மேலும், அவர்களின் கையில் 2 ஜாய் ஸ்டிக் கருவிகள் தரப்படும். இதில் முகப்புப் பக்கத்தில் நுழைந்து தமிழ், ஆங்கிலம் என கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டில் மொழியில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

பின்பு அதில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை ஜாய் ஸ்டிக் கருவியை கொண்டு ஒவ்வொரு பொருட்களின் அருகிலும் சென்று பார்க்கலாம்.

மேலும், நேரில் வாங்குவது போன்ற உணர்விலேயே சிலைகளை தூக்கிப் பார்க்கலாம். ஒரு சிலை எவ்வாறு எடை, உயரம், வடிவமைப்புடன் உள்ளதோ, அது போன்றே உணர்வு மெய்நிகர் காட்சியிலும் இருக்கும். இதற்கு தனி கட்டணம் இல்லை. இதன் வழியாக வாடிக்கையாளர்கள் பிடித்த பொருட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

 

Source & Image courtesy: Hindhu tamil