உலக தரத்தோடு உயர்ந்து நிற்கும் வேலூர் சி.எம்.சியை உருவாக்கிய அமெரிக்க இளம் பெண்!

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி உலகில் தொழிற்புரட்சி வளர்கிற நேரம் 1877 இல், நமது இந்தியத் துணைக்கண்டத்தில் கடுமையான பஞ்சம். ஒரு வேலை சோற்றுக்குக் கூட வழி இல்லாத பசியால், தொடர்ந்த பட்டினியால் வற்றிய வயிரோடு எலும்பும் தோலுமாக காண முடியாத சோகத்தில் குழந்தைகள், பெரியவர்கள். அரசாங்க கணக்கின் படியே மரணம் 50 லட்சத்தை தாண்டியது.

அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக இந்தியா வந்தன. அப்படி ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான். இவரது 14 வயது மகள் ஐடா சோஃபியா ஸ்கடர்! உதவி செய்யும் குழுவில் தந்தையோடு வந்தவர் நமக்கெல்லாம் தாயாக மலர்வார் என்று அப்போது தெரியாது.

ஒரு நாள் இரவு, மருத்துவரான தந்தை தூங்கப் போன பின் முன் அறையில் புத்தகம் படித்துக்கொண்டு இருக்கும் போது கதவு தட்டப்படுகிறது, சிறுமி ஐடா கதவை திறக்க, அங்கே நின்றிருந்த மனிதர், பதற்றத்தோடு மருத்துவர் வீடு தானே என்று கேட்டுவிட்டு தன் மனைவி பிரசவ வலியால் துடிப்பதாகவும் சிகிச்சைக்கு வருமாறும் அழைக்கிறார்.

ஐடாவோ, “நான் டாக்டரல்ல, என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம்  இருங்க அவரை எழுப்புறேன்” என்கிறார்.

“இல்லம்மா.. என் மனைவிக்கு 14 வயசுதான். நாங்க பிராமணாளுங்க, பெண்ணை கணவனல்லாத பிற ஆம்பள தொடக்கூடாது” என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

வருத்தமும் குழப்பமும் மனதை வாட்ட உறக்கம் வர மறுக்க படுக்கையில் புரள்கையில் கொஞ்ச நேரத்தில் மீண்டும் கதவு தட்டப்படுகிறது.

ஒரு முஸ்லிம் வாலிபர் கதவை தட்டுகிறார். வந்தவரும் தன் மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைக்கிறார். ஐடா தன் தந்தையை பற்றிக்கூற, வேண்டாம்மா, நாங்கள் முஸ்லிம்கள், எங்கள் பெண்களை ஆண்கள் பார்க்கவே கூடாது என்று சொல்லிவிட்டு வருத்தம் தோய்ந்த முகத்தோடு போய்விடுகிறார்.

ஆச்சாரமும், கோஷாவும் அந்த ஆண்களை திரும்பிப்போக அனுமதித்தது. ஆனால் அந்த பெண்கள் என்ன ஆனார்களோ, என்ற வருத்தமும் பதட்டமும் இரவெல்லாம் அந்த சின்னப்பெண்ணை தூங்க விடவில்லை.

தவிப்போடு விழித்திருந்த ஐடா, மறுநாள் காலை அவரவர் மதச்சடங்குகள் மாறாமல் இரண்டு பெண்களின் சடலங்களும் தெருவில் போவதைப் பாரத்து துடித்துப் போகிறாள். அதிர்ச்சியும் அழுகையும் ஐடாவின் கண்களை வீங்க மட்டும் செய்யவில்லை விழிக்கவும் செய்தது.

என்ன மனிதர்கள் இவர்கள் பெண்களை படிக்கவும் விட மாட்டார்கள், பெண்தான் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க வேண்டும் என்றும் சொல்கிறார்களே என்று வருந்துகிறாள்.

பொதுவாக மனிதர்களின் சோகம் மறந்து விடும், சிறிது நாட்கள் கடந்தால் மரண சோகம் நடந்த வீட்டில் மாங்கல்ய சப்தமும் கேட்கும் என்பது இயல்பு. ஆனால், இலட்சியவாதிகளின் சிந்தனை இனிமேல் இந்த சோகம் யாருக்கும் நடக்காமல் தடுக்க முயல வைக்கும்.

அப்படித்தான் ஐடாவிற்கு இரண்டு பெண்களின் மரணம் இதயத்தைத் துளைத்தது. இவர்கள் பெண்களை படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்துவிட்டு வந்து இந்த பெண்களை காப்பாற்றுவேன் என உறுதியேற்று அமெரிக்கா சென்று படித்து டாக்டராகிறார் ஐடா..!

இங்கே படித்துவிட்டு அமெரிக்காவில் குடியேறி டாலரில் சம்பாதிக்கும் கனவோடு சுற்றும் நம் இளைஞர்கள் ஐடாவை பற்றி அறிவது அவசியம். அமெரிக்காவில் படிக்கும் போது சக மாணவர் ஒருவர் ஐடாவை காதலிக்கிறார், மருத்துவம் படித்து முடித்ததுமே அமெரிக்காவிலேயே வேலை வாய்ப்பு வந்தது ஐடா இரண்டையும் புறக்கணித்தார்.

ராணிப்பேட்டையில் இறந்து போன இரண்டு பெண்களின் சடலங்களும், இனி யாரும் அவ்வாறு சாகக் கூடாது என்ற கனவுகளும் மட்டுமே அவரது கண்களில் இருந்தது. படிப்பு மட்டும் போதாது, ஒரு மருத்துவமனையும் வேண்டும் என்று தான் சந்தித்த நிகழ்வைக் கூறி உதவ கேட்கிறார். மனம் நேயத்தோடு கிடைத்த தொகையோடு இருபதாம் நூற்றாண்டின் முதல்நாள் இந்தியா திரும்புகிறார்.

சொல்ல முடியாத சிரமங்களை எதிர்கொண்டு உள் நோயாளிகளுக்கு 40 படுக்கையுடன் மருத்துவமனை கட்டி முடிக்கிறார். ஒரு ஐந்து பெண்கள் சேர்த்து அவர்களுக்கு சிகிச்சையில் உதவியாக இருப்பதற்கு பயிற்சி கொடுத்தார். அவர்கள் தான் தமிழ்நாட்டின் முதல் செவிலியர்கள்.

பெண்களுக்காக கட்டப்பட்ட அந்த மருத்துவமனைதான் இன்று நூற்றாண்டு கடந்து இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலும் பெருமையொடு உயர்ந்து நிற்கும் வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை.

எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, பஞ்சத்தில் வாடிய மக்களுக்காக உதவ இந்தியா வந்த மருத்துவரான தந்தையோடு வந்தவர், இறந்து போன இரண்டு பெண்களுக்காக அழுதார். வெறும் அழுகையோடு நின்று விடவில்லை. இனி எந்த பெண்களும் முறையான பிரசவ சிகிச்சை இன்றி இங்கே இறக்கக் கூடாது என்று நினைத்தார்.

இன்று நமது பெண்கள் மருத்துவப் பட்டப்படிப்பும் பட்ட மேற்படிப்பும் படித்து உயர்கிறார்களே, இதற்கு மனித நேயம் மிக்க ஐடாவும் வழிகாட்டி என்பதை அறிந்திருக்க வேண்டும். கண்கள் நிறைய கனவுகளைச் சுமக்கும் தேவதையாக வளர்ந்த இளம் பெண் ஐடா சோஃபியா ஸ்கடர், தனி ஒருவராக ஏற்றிய மெழுகுவர்த்தி தான் வேலூரில் உலக தரத்தோடு உயர்ந்து இன்றும் பலருக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்று டிசம்பர் 9, அவரது பிறந்த நாள் நன்றியுடன் நினைவு கூறுவோம்.

 

–  முகமது ஜியாவுதீன்

 முன்னாள் மாவட்ட நீதிபதி