அரசு பள்ளியில் பறை அடித்த முன்னாள் நீதிபதி முகமது ஜியாவுதீன்

கோவை சவேரியார் பாளையம் அரிமா சங்கத்தின் சார்பில் கோயம்புத்தூர் காந்தி மாநகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்துவதற்காக இசைக்கருவிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கூட்டத்திற்கு அரிமா சங்கத் தலைவர் கர்ணன் தலைமை தாங்கினார். முதலாம் துணை ஆளுநர் ஜெயசேகரன் முன்னிலை வகித்தார். அரிமா சங்க செயலாளர் ஜாஃபர் அலி, வெங்கடாசலம், செந்தில்குமார், மோகன்ராஜ், கஸ்தூரி சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு மற்றும் இசைக்கருவிகளை வழங்கி முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது: மாவணவர்களும் இளைஞர்களும் வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் செயல்படுவதற்கு முந்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும். வாய்ப்பு வரும் என்று காத்திருப்பவர்கள் எப்போதும் வெற்றி பெற முடியாது. புத்தகத்தில் மட்டும் அல்ல ஒவ்வொரு நிகழ்வுகளிலும் கற்றுக் கொள்ள வேண்டும்.

நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் எந்த சூழ்நிலையிலும் நேர்மையை கடைப்பிடிப்பதில் தவறக்கூடாது என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் அவர் தொடர்ந்து பேசும்போது, திருக்குறளில் உயிரை விட மேலானதாக ஒழுக்கம் வலியுறுத்தப் பட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் நாட்களில் இருந்து ஒழுக்கத்தை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். ஒழுக்கம் இல்லாதவர்கள் எவ்வளவு உயர்ந்தாலும் அது நிலைக்காது.

மாதா, பிதா, குரு, தெய்வம் வரிசையில் நண்பர்களையும் சேர்க்க வேண்டும். நல்ல நண்பர்கள் கிடைத்தவர்கள் வாழ்க்கையில் தோற்க மாட்டார்கள்.

எதிர்கால வாழ்க்கை என்பது நமது மனம் சார்ந்தது. தொடர்ந்து எதைப் பற்றி சிந்திக்கிறோமோ அதுதான் நமது வாழ்க்கை. வெற்றி பெற வேண்டும் என்று எண்ணம் உள்ளவர்கள் அந்த எண்ணத்தோடு நேர்மையான வழியில் நேர்மறை எண்ணத்தோடு ஒழுக்கம் தவறாமல் உழைத்தால் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர் என்று பள்ளியில் படிக்கும் போது ஒதுக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களும், ஏழ்மையான குடும்பத்தில் இந்தியாவின் கடை கோடி கிராமமான ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம் அவர்களும் கல்வி, நேர்மை, நேர்மறை எண்ணம், ஒழுக்கம் ஆகிய பண்புகளோடு உழைத்ததால் மிகப்பெரிய இடத்திற்கு உயர்ந்தார்கள்.

எனவே, நாம் இப்போது எப்படி இருக்கிறோம், நமது குடும்பச் சூழ்நிலை என்ன என்று நினைக்காமல் நன்றாகப் படித்து நேர்மையோடு உழைத்தால் நாமும் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையை மாணவர்கள் பெற வேண்டும்.

கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு பலர் வேலையை இழந்ததால் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்வது அதிகமாகி இருக்கிறது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு பல உதவித் திட்டங்களை வழங்குகிறது. அதனோடு அந்தந்த பகுதியில் இருக்கிற செல்வந்தவர்களும், அரிமா சங்கங்களை போன்ற அமைப்புகளும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவ முன்வரவேண்டும். அதனை பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் உயர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

நிகழ்ச்சியின் முடிவில் அரிமா சங்கம் சார்பில் பியானோ ட்ரம்ஸ் உள்ளிட்ட இசைக்கருவிகளும் பறையும் வழங்கப்பட்டது. இசைக்கருவிகளை வழங்கும் போது முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன் தொடர்ந்து சில நிமிடங்கள் பறை வாசித்தார். அதைக்கேட்ட மாணவர்களும் மேடையில் இருந்தவர்களும் கைதட்டி உற்சாகமானார்கள்.