வெகுநேரம் சாலையில் நின்ற காட்டு யானைகள்

பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறையினர்

கோவை மாவட்டம் சிறுமுகை லிங்கபுரம், காந்தவயல் உள்ளிட்ட கிராமங்களின் அருகே உள்ள வனப்பகுதியில் காட்டு யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில் பருவமழை காரணமாக பவானி சாகர் அணையின் நீர் மட்டம் 103 அடிக்கு மேல் உள்ளதால் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டு வனப்பகுதியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளன.

இதனால் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் சிறுமுகை வனப்பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு இடம் பெயர்ச்சி செல்ல கிராம சாலைகளை கடந்தே சென்று வருகின்றன.

இந்த நிலையில் இன்று காலை சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியான லிங்காபுரம் காந்தவயல் இடையே உள்ள கிராம சாலையை காட்டு யானைகள் கடக்க வந்து சாலையோரம் நின்று கொண்டிருந்தன.

வெகுநேரமாக அங்கேயே சாலையின் ஓரத்தில் நின்றதால் வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி யானைகளை பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டினர். இதனையடுத்து கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.