சச்சிதானந்த பள்ளியில் பேரிடர் கால மீட்புப்பணி விழிப்புணர்வு

மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் பேரிடர் கால மீட்புப்பணி விழிப்புணர்வு ஒத்திகைப் பயிற்சி நடத்தப்பட்டது.

மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறை அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான தீயணைப்புத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பள்ளியின் நான்காம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்குப் பேரிடர் காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த ஒத்திகைப் பயிற்சியினைப் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நடத்தினர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறை அலுவலர் பாலசுந்தரம் கூறியதாவது: இயற்கைச் சீற்றம் பேரழிவு போன்ற காலங்களில் உயிர் மற்றும் பொருட்சேதம் அதிக அளவில் ஏற்படுகிறது. இதுபோன்ற சமயங்களில் முதலில் நாம் பீதியடையக்கூடாது.

தீ விபத்தாக இருந்தால் அக்கம் பக்கத்திலிருப்பவர்களை எச்சரிக்க வேண்டும். தீயணைப்புத் துறைக்கு உடனே தகவல் தர வேண்டும். எதனால் தீ விபத்து ஏற்பட்டிருக்கின்றது என்பதனை அறிந்து அதற்கேற்ப தீயை அணைக்க முயல வேண்டும்.

ஆசிரியர்களும், பள்ளி மாணவ மாணவியரும் பேரிடர் காலங்களில் எவ்வாறு உங்களையும் உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று அறிந்துகொண்டிருக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். எனவேதான் இந்த ஒத்திகைப் பயிற்சியினை அளிக்கின்றோம் என்றார்.

பள்ளி மாணவ மாணவியர் தீயணைப்புத் துறை அதிகாரிகளுடன் இணைந்து எண்ணெயால் ஏற்படும் தீ, எரிவாயுவினால் ஏற்படும் தீ ஆகியவற்றை எவ்வாறு பாதுகாப்புடன் அணைப்பது என்பது பற்றிய செயல் விளக்கங்களை அளித்தனர்.

தீ ஏற்பட்ட இடத்தில் பயன்படுத்தப்படும் மீட்புப் பணிகளுக்குத் தேவையான உபகரணங்கள், வெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் உபகரணங்கள், பாம்புகளைப் பிடிக்கும் கருவிகள், மரங்களை அறுக்கும் பவர் ஹேக்ஸா மெஷின், ஸ்ட்ரெச்சர் ஆகியனவற்றைப் பற்றி அறிந்து கொண்டனர்.

ஆற்றில் சிக்கிக்கொள்ளும் போதும், விபத்துகள் போன்ற காரணங்களால் மயக்கமடைகின்றபோதும் எவ்வாறு விரைந்து செயல்பட வேண்டும் என்பதனை செயல் விளக்கமாக தீயணைப்புத் துறையினர் விளக்கினர்.

நிகழ்ச்சியில் பள்ளியின் கல்வி ஆலோசகர் கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.