வலுப்பெறும் திமுக கூட்டணி குழப்பத்தில் அதிமுக கூட்டணி

எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட ஆயத்தப் பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளன. திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்து ஒரே அணியில் வலுவாக இருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் போன்ற சில கட்சிகளை இணைப்பதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், அதிமுக கட்சிக்குள் மட்டுமன்றி, கூட்டணிக்குள்ளும் தொடர்ந்து குழப்பமே நீடித்து வருகிறது.

17 வது மக்களவைக்கான தேர்தல் 11.4.2019 முதல் 19.5.2019 வரை 7 கட்டங்களாக நடந்தது. இதற்கான அறிவிக்கை 10.3.2019 இல் மத்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அந்த வகையில் எதிர்வரும் 18 வது மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் இன்னும் ஓராண்டு 4 மாதங்களில் வெளியிடக்கூடும்.

எதிர்வரும் பிப்ரவரியில் நிதிநிலை அறிக்கை வெளியிட்டப்பின்னர் மே மாதத்துக்குப்பின் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டும். ஆனால், தமிழகத்தில் இப்போதே தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளையும் அதன் நிலப்பரப்பு, மக்களின் பழக்க வழக்கங்கள அடிப்படையில் 5 வகை மண்டலங்களாக பிரிக்கலாம். சென்னை மண்டலத்தில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என 3 தொகுதிகள், வட தமிழகத்தில் திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், ஆரணி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், வேலூர், அரக்கோணம் என 11 தொகுதிகள், டெல்டா மாவட்டங்களில் திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், நாகை, மயிலாடுதுறை என 5 தொகுதகள், கொங்கு மண்டலத்தில் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி என 10 தொகுதிகள், தென்மாவட்டங்களில் கன்னியாக்குமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் என 10 தொகுதிகள் உள்ளன.

திமுக: 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியில் இணைந்த காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக உள்ளிட்ட கட்சிகள் 38 தொகுதிகளில் வெற்றிக்கனியை பறித்தது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியும், மோடி எதிர்ப்பை கூர்மைப்படுத்தியும் கடந்த மக்களவைத் தேர்தலை திமுக கூட்டணி வெற்றிக்கரமாக கையாண்டது.

2021 பேரவைத் தேர்தல், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் என தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி வளையத்தில் வரும் இக்கூட்டணியை தக்கவைக்கும் முயற்சியில் தான் திமுக இறங்கியுள்ளது. 10 சதவீத இடஒதுக்கீட்டில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் இடையே திமுகவுடன் முரண்பாடு இருந்தாலும் தேர்தல் என வரும்போது இரு கட்சிகளுக்கு இப்போதைக்கு மாற்று வாய்ப்பு இல்லை.

இரு வாரங்களுக்கு முன்பு திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் வாக்குச்சாவடி நிர்வாகிகள் கூட்டம் ஆன்லைன் மூலமாக நடைபெற்றுள்ளது. அதேபோல, வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை சேர்த்தல் பணிகளிலும் திமுக தொண்டர்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் பொதுக்கூட்டங்களிலும், உள்கட்சி விவாதங்களிலும் கூட்டணியை மேலும் வலுப்படுத்துவோம், 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என தொடர்ந்து கூறி வருகிறார்.

அதிமுக: 2004 இல் பாஜகவோடு கூட்டணி சேர்ந்து எந்த தொகுதியிலும் அதிமுகவால் வெற்றிபெற முடியவில்லை. அதன் பின் 15 ஆண்டுகளுக்குப்பின், 2019 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி மலர்ந்தது. பிரதமர் மோடியை மையமாக வைத்து அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி என வலுவான கூட்டணி அமைந்தாலும் தேனி தொகுதியில் மட்டுமே வெற்றிக்கனியை பறிக்க முடிந்தது.

2021 பேரவைத் தேர்தலில் தேமுதிக, புதிய தமிழகம் தவிர பிற கட்சிகள் அதிமுக அணியில் இருந்தன. இருப்பினும் 75 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றதுடன் மக்களவைத் தேர்தலில் 29.61 ஆக இருந்த அதிமுக அணியின் வாக்கு சதவீதம், பேரவைத் தேர்தலில் 39.72 ஆக உயர்ந்தது.

இபிஎஸ், ஓபிஎஸ் என இருவரும் முரண்பட்டு நிற்கின்றனர். தொடக்கத்தில் இருந்தே ஓபிஎஸ், பாஜகவுடன் நெருக்கமாகவே இருந்து வருகிறார். ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத், பிரதமர் மோடியின் புகைப்படத்தை தனது லெட்டர் பேடில் அச்சடித்துவைக்கும் அளவுக்கு ஓபிஎஸ், பாஜக நெருக்கம் உள்ளது. விரைவில் பொதுக்குழுக்கூட்டம் நடத்தி, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய ஓபிஎஸ் தயாராகி வருகிறார்.

ஆனால், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று அறிவித்ததுடன், அதில் ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோருக்கு இடமில்லை என உறுதியாக உள்ளார். ஓபிஎஸ், பாஜக நெருங்கி பழகுவதையும், தனக்கு இணையாக ஓபிஎஸ்.,யை, பாஜக மதிப்பதை இபிஎஸ் ரசிக்கவில்லை. எனவே, திமுக அணியில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுக்கு தூண்டில் போடலாமா என இபிஎஸ் அணியினர் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

பாஜக: கன்னியாக்குமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, வேலூர், தென்சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு என 10 தொகுதிகளையும் குறிவைத்து வாக்குச்சாவடி வாரியாக தீவிரமாக களமாடி வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகைக்குப்பின் மத்திய அமைச்சர்கள் வாரந்தோறும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். ஜனவரி முதல் 2 ஆம் கட்டமாக மேலும் பல தொகுதிகளில் மிக நுட்பமாக வியூகம் அமைத்து செயல்பட பாஜக தயாராகி வருகிறது.

ஈர்ப்பு சக்தி மிக்க தலைமை இல்லாததால் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜகவை, இபிஎஸ் நெருங்கித் தான் ஆக வேண்டும். இல்லையெனில் ஓபிஎஸ், தினகரன், தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்டவற்றுடன் தனி அணி அமைத்து களம் இறங்கும் திட்டத்தையும் பாஜக கையில் வைத்துள்ளது.

பாமக, அமமுக, மநீம: 2026 பேரவைத் தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்துள்ள பாமக, 2024 மக்களவைத் தேர்தல் பற்றி இதுவரை வாய்திறக்கவில்லை. கூட்டணியா, தனித்து போட்டியா என்பதை தேர்தல் நெருங்கும்போது தான் பாமக இறுதி முடிவை எடுக்கும். இருப்பினும், வடதமிழகத்தில் தங்களுக்கு சாதகமான தொகுதிகளில் வாக்குச்சாவடி வாரியாக களப்பணியை பாமக முடுக்கிவிட்டுள்ளது.

2019 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுக, 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த கூட்டணி சேர தயார் என அறிவித்துள்ளார். பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்கும் அணியை நோக்கி தினகரன் நகர்ந்து வருகிறார். மேலும், டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் தங்களுக்கு சாதகமாக தொகுதிகளில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளி ல் தினகரன் ஈடுபட்டு வருகிறார்.

கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ஓரிரு நாள்களுக்கு முன்பு சென்னையில் கூடி மக்களவைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். கமலஹாசனின் அறிக்கைகள், அரசியல் அசைவுகளை பார்க்கும்போது இம்முறை தனித்து போட்டியில்லை என்பதும், திமுக கூட்டணியில் ஐக்கியமாக ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளை பெறுவதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதாகவே தெரிகிறது.

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல மக்களவைத்தேர்தலுக்கான தமிழக அரசியல் கட்சிகளின் ஆடுபுலி ஆட்டம் தொடங்கியுள்ளது. எந்த கட்சியின் தலைமையில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பதை தேர்தல் நெருங்கினால் மட்டுமே இறுதிவடிவம் பெறும்.