வெற்றி என்பது இலக்கல்ல, ஒரு பயணம்!

 – காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் எம்.கிருஷ்ணன் பேச்சு

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்து வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவரும், நிர்வாக இயக்குனருமான கிருஷ்ணன் கலந்துகொண்டு ‘தரமும் தனி அடையாளமும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

தமிழின் இனிமைக்கும், சுவை மிகுந்த சிறுவாணி தண்ணீருக்கும் பெயர் பெற்ற (கொங்கு நாட்டின்) கோயம்புத்தூரில் இருந்து வருவதாக கூறியவர், கொங்கு நாட்டுக்கும், காசிக்கும் இடையே உள்ள தொடர்பை குறிப்பிட்டார்.

கொங்கு நாட்டில் உள்ள புகழ் பெற்ற ஸ்தலமான அவிநாசியில் உள்ள சிவலிங்கமும் பைரவரும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு காசியில் இருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டவை ஆகும் என்றார்.  கோவிலில் உள்ள தீர்த்தக் கிணறு கூட காசியில் உள்ள கங்கையின் நினைவாக காசிக்கிணறு என்று வழங்கப் படுகிறது.

இந்து தர்மத்தின் தலைமையகமாக விளங்கும் காசி இயற்கையாகவே பாரதத்தின் அனைத்து இடங்களோடும் உறவு கொண்டது. அந்த வகையில் இதற்கு கொங்கு நாடும் விதிவிலக்கு அல்ல. அவர் பேசும்பொழுது நமது மரியாதைக்குரிய பிரதமர் தமிழ் மொழியை பழமையான பண்பாடும் வளமான பாரம்பரியமும் கொண்ட மொழி என்று குறிப்பிட்டதை சொன்னார்.

அந்த பண்பாட்டின் பாரம்பரியத்தின் பிரதிநிதியாக நிற்கின்ற தான், இதனை பெருமையாக கருதுவதோடு, பெரும் பொறுப்பாகவும் உணர்வதாக கூறினார். சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் உள்ளிட்ட பல மன்னர்கள் இந்த பண்பாட்டை வளர்த்தெடுத்தனர். அவர்களிடையே வேறுபாடுகளும் பூசல்களும் இருந்த பொழுதும் வணிகமும் பண்பாடும் எந்த காலத்திலும் பாதிக்கப்பட்டதில்லை, என்பதோடு திருக்கோவில்கள் மூலமாக அவை கடல் கடந்தும் கூட பரவியது என்பதையும் குறிப்பிட்டார்.

தனித்துவத்தை உருவாக்க வேண்டும்!

உணவின் தரத்தை பற்றி அவர் பேசும்பொழுது, உணவுப் பொருட்களுக்கும், மற்ற உற்பத்தி பொருட்களுக்கும் ஒரு முக்கியமான வேறுபாட்டை சுட்டிக்காட்டினார். மற்ற பொருட்களின் தரத்தை சோதிப்பது ஆய்வகத்தோடு நின்று விடுகிறது. ஆனால் உணவுப் பொருட்களுக்கு அதனை தாண்டி சுவைப்பவரின் நாக்கிலும் அதன் தரம் சோதிக்கப்படுகிறது. அதனை நிறைவு செய்யும் பொழுது தான் சுவையும் தரமும் உறுதி செய்யப்படுகிறது.  உணவுப் பொருளின் தரத்தை அதன் அமைப்பு, வடிவம், நிறம், மணம், உண்பவரின் மனநிலை என்று பலவும் இணைந்து தீர்மானிக்கின்றன.

கவனமாக ஒரு தரத்தை உருவாக்க வேண்டி உள்ளது. ஆனால் ஆச்சரியமாக கோவில் பிரசாதங்களில் இது இயல்பாகவே பின்பற்றப்பட்டு மக்கள் வரிசைகளில் நின்று பெற்றுச் செல்வதை காண முடிகிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு திருப்பதி லட்டு ஆகும். பலகாலமாக வழங்கப்பட்டு வரும் அதன் சுவை மாறவே இல்லை.  அந்த வகையில் இந்த தர உருவாக்கம் என்பது நமது முன்னோர்களிடமிருந்து பெற்றது என்று கூறலாம்.

இன்று நமது வணிக பரப்பு என்பது உலகம் முழுவதும் என்று ஆகிவிட்டது. உலக சந்தையை அடைய வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். ஒருமுறை நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என்னிடம் உங்கள் பொருட்களின் செல்ஃப் லைஃப் குறித்து ஏதாவது கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறை வைத்திருக்கிறீர்களா என்று கேட்டார்.  தரமான பொருளின் விற்பனை, வாடிக்கையாளர் சேவை என்பது வரை கவனம் செலுத்திய நாங்கள் அடுத்து பொருளின்  உற்பத்தி முதல் வாடிக்கையாளர் கைக்கு செல்வது வரை கவனம் செலுத்தத் தொடங்கினோம்.

நமது பொருளின் சுவை என்பது கோவையோ, மும்பையோ, துபாயோ மாறாமல் ஒரே மாதிரி இருந்தால் நமது தரம் நன்றாக உள்ளது என்று கொள்ளலாம். மேலும் வாடிக்கையாளர் மீது கொள்ளும் அக்கறை, பாரம்பரிய வணிக முறைகள், சிறந்த மூலப் பொருட்கள், சமைக்கும் முறைகளில் தரம் ஆகியவை தரத்தை உறுதி செய்கின்றன. எங்களது  இனிப்பு வகைகளில் சிறப்பிடம் பெற்றது மைசூர்பா ஆகும். பல ஆயிரம் கிலோ விற்றாலும் கூட அதன் ஒவ்வொரு துண்டும் அதன் தரத்தை கூறும் அளவு கைப்பக்குவத்தில் உருவாக்கப்படுகிறது.

ஒரு நிறுவனத்தின் பிராண்ட் என்பது தரமான பொருள் இல்லாமல் அமையாது. அதேபோல தரமான பொருள் மட்டுமே பிராண்ட் எனும் தனி அடையாளத்தை உருவாக்கி விடாது. தரமான பொருளை, வாடிக்கையாளரைக் கவரும் வகையில் தருவது நமக்கு ஒரு தனித்துவத்தை உருவாக்கும். அவர்களை நமது விளம்பர தூதுவர்களாக மாற்றும். அது வாடிக்கையாளர்களை நாம் எவ்வாறு தனித்துவமிக்க அணுகுமுறைகளால் அணுகுகிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது.

பிராண்ட் என்பது நம்பிக்கை!

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சின் சிறப்பு பற்றி அவர் கூறுகையில்: ஒரு இனிப்பு விற்பனை கடையின் தோற்றத்தை  நகைக்கடை அளவுக்கு கம்பீரமாக கண்ணைக் கவரும் வண்ணம் உருவாக்கினோம். இங்குள்ள இனிப்புகள் நெய்யினால் செய்யப்பட்டவை அல்ல என்று அறிவிப்பு பலகை வைத்திருந்த காலத்தில் அதை மாற்றி இங்கு இனிப்புகள் சுத்தமான நெய்யினால் செய்யப்பட்டது என்று வாடிக்கையாளருக்கு உரக்கத் தெரிவித்தோம். கண் கவரும் வகையில் காற்று புகா பெட்டிகளில் இனிப்புகளை அறிமுகம் செய்தோம். செங்கல் என்று மைசூர் பாக்கைச் சொல்லி ஜோக் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் “வாயில் வைத்தாலே கரையும் மென்மையான இனிப்பு”என்று சொல்லி மைசூர் பாக் என்று இருந்ததை மைசூர் பா என்று மாற்றினோம்.

இந்த நான்கும் சேர்ந்து கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாவுக்கு ஒரு தனி இடத்தை உலக அளவில் கொண்டு சென்றன.  கூடுதலாக பொது நிகழ்வில் எங்கள் பங்களிப்பு, பொருத்தமான பொருள், புதிதாக விளம்பர வாசகங்கள் ஆகியவை இன்னும் எங்கள் தனித்துவத்தை உயரச் செய்தன. பிராண்ட் என்பது வேறொன்றுமில்லை, நம்பிக்கை. இதுதான் வெற்றி என்று யாராலும் அறுதியாக சொல்ல முடியாது. ஏனெனில் வெற்றி என்பது இலக்கல்ல, ஒரு பயணம்!

உணவு பொருட்களுக்கு பெரிய சந்தை காத்திருக்கிறது. தேவைகளும் அதிகரித்து வருகின்றன. இங்கு இன்னும் பல திறமைசாலிகளும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கின்ற வகையில் வகை வகையான உணவுப் பொருட்களும் ஏராளமாக உள்ளன. இவற்றை அரசாங்கம் சரியாக முறைப்படுத்தினால் உலக உணவுச் சந்தையில் இந்தியாவும் ஒரு பெரும் வெற்றியாளராக வலம் வர முடியும்.