நடந்து வந்து தொண்டர்களிடம் புத்தகம் பெற்ற முதல்வர் ஸ்டாலின்

கோவை வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்

கோவை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் தொண்டர்கள் வழங்கிய புத்தகங்களையும், பொன்னாடைகளையும் நடந்து வந்து பெற்று கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடைபெறும் திமுக பிரமுகர் டாலர் பாலு இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் கலந்து கொள்கிறார். இதற்காக விமானம் மூலம் ஸ்டாலின் கோவைக்கு வந்தடைந்தார். கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் மதிய உணவு அருந்திவிட்டு அதன் பின் சாலை மார்க்கமாக திருப்பூர் புறப்பட்டார்.

முன்னதாக கோவை விமான நிலையம் வந்தடைந்த தமிழக முதல்வருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து வழி நெடுகிலும் திமுக தொண்டர்கள் வரிசையாக நின்று மேளதாளங்கள் முழங்க வாழ்த்து முழக்கங்களை எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பலர் புத்தகங்களையும் பொன்னாடைகளையும் வழங்கினர். அவற்றை அவர் நடந்து வந்து பெற்றுக்கொண்டு அதன்பின் காரில் புறப்பட்டு சென்றார்.

இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி உடனிருந்தார். முதல்வர் அவராகவே நடந்து வந்து பரிசுகளை பெற்று கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தொண்டர்கள் தெரிவித்தனர்.