சூயஸின் அலட்சியத்தால் சேதமடைந்த சாலை?

கோவை பீளமேடு சந்திரகாந்தி நகரில் (4 கிராஸ்) சேதமடைந்த சாலையில் தண்ணீர் குழாய் உடைந்ததில் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் செல்லமுடியாமல் சிரமத்துக்கு உள்ளாகினர்.

மேலும், அந்தப் பகுதியில் அதிக சேறும், சேகதியும் நிறைந்து காணப்பட்டதால், இன்று காலை கார் ஒன்று அதில் சிக்கியது. அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களின் அழைப்பை ஏற்று கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்  நேரில் சென்று பார்வையிட்டதுடன், சாலையை விரைந்து சரி செய்யுமாறு உரிய அதிகளிகளிடம் கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்: நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சாலையில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னதாகவே பைப் லைன் உடைந்து, தண்ணீர் சாலையில் தேங்கி நின்றது. இதற்கு நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்திருந்தோம். இந்த நிலையில் நவ 2 ஆம் தேதி இரவு 11 மணியளவில் சூயஸ் நிறுவனத்தின் ஊழியர்கள்  ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு தருவதற்காக ஏற்கனவே பைப் லைன் உடைந்திருந்த சாலையை தோண்டியதால் குடிநீர் குழாய் மேலும் அதிகமாக உடைந்தது.

இதனை பொருட்படுத்தாமல் அவர்கள் அதில் மண்ணை போட்டு மூடினர். இதனால் இப்போது தண்ணீர் அதிகளவில் வெளியேறி சாலையில் மக்கள் நடக்க முடியாதபடியும், வாகன ஓட்டிகள் செல்ல முடியாதவாறும் சேறும், சகதியுமாக உள்ளது. மேலும், கார் ஒன்றும் இந்த சகதியில் சிக்கியது, அதனை ஜெ.சி.பி உதவி கொண்டே மீட்டோம்.

அதனால் சிரமத்தை தடுக்கும் வண்ணம் வாகன ஓட்டிகளை வேறு பாதையில் செல்லுமாறு அறியுறுத்தினோம்.

இதனை சரிசெய்யுமாறு சூயஸ் நிறுவனத்திடம் கூறினால், மாநகராட்சி இதனை சரிசெய்ய வேண்டும் என்கின்றனர். கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்கிடம் இதுகுறித்த தகவலை அளித்தோம்.

அவர் நேரில் வந்து பார்வையிட்டு உரிய அதிகாரிகளிடம் பேசினார். தற்போது மாநகராட்சி பணியாளர்கள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கூறினர்.