வேளாண் பல்கலையில் இளமறிவியல் படிப்புக்கான சான்றிதழ் சரிபார்ப்பு

6 முதல் 12ம் வகுப்பு வரை தொடர்ச்சியாக அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று துவங்கியுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்ததாவது: அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக மொத்தம் 7755 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதை பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பி, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்றது குறித்து ஆய்வு செய்து, தகுதியான 6602 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன.

இவர்களுக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, 413 இளமறிவியல் படிப்பு இடங்களுக்கான கலந்தாய்வுப் பணிகள் துவங்கி உள்ளது. இன்று சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளுக்காக மாணவ மாணவிகள் பெற்றோர்களோடு வந்துள்ளனர்.

தரவரிசை பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா 200க்கு, 196 கட்ஆப் மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளார். பிஎஸ்சி, படிப்பு கோவை வேளாண் பல்கலையில் படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் 194 மதிப்பெண்கள் பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல இந்திரா மதுரை கல்லூரியிலும், 193.5 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற புதுக்கோட்டை சேர்ந்த ஸ்ரீதேவி என்ற மாணவிக்கு கோவை வேளாண் பல்கலைக்கழக கல்லூரியில் தமிழ் வழியில் படிப்பதற்கான விருப்பம் தெரிவித்துள்ளார். அவருக்கும் இன்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

7.5% இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு விடுதி கட்டணம் உள்ளிட்ட படிப்புக்கான முழு செலவையும் அரசு ஏற்றுக்கொள்கிறது. இதற்காக அவர்கள் ஒரு பைசா கூட செலவிட தேவை இல்லை.

இதில் இடம் கிடைக்காதவர்கள் பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங்கில் கலந்துகொண்டு கட்டணம் செலுத்தி படிக்கலாம்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி இயங்கி வரும் 18 நேரடி உறுப்பு கல்லூரிகளிலும், 28 தனியார் உறுப்பு கல்லூரிகளிலும் இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.

ஜனவரி 8 ஆம் தேதி பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இவர்களுக்கான வகுப்புகள் துவங்கப்படும் என கூறினார்.