தமிழக மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்!

 – வானதி சீனிவான் அறிக்கை

விவசாயிகள், பொதுமக்கள் மீது கொஞ்சமும் அக்கறை இல்லாமல், தொழிற்பேட்டை என்ற பெயரில் விவசாய நிலங்களை தி.மு.க. அரசு அழிக்கத் துடிக்கிறது எனவும், எதிர்க்கட்சியாக இருந்தபோது தொழில் வளர்ச்சியை முடக்கியதற்காக திமுக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: 2011 முதல் 2021 வரை, பத்தாண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்காக, நிலங்களை கையகப்படுத்த முயற்சி செய்த போதெல்லாம், அதனை தி.மு.க. மிகக் கடுமையாக எதிர்த்தது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போர்வையில் செயல்படும் தி.மு.க.வினரை தூண்டிவிட்டு, வளர்ச்சி திட்டங்களை முடக்கியது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், எந்த காரணத்தை முன்னிட்டும் விவசாய நிலங்களை கையகப்படுத்த மாட்டோம், தரிசு நிலங்களை கூட விவசாய நிலங்களாக மாற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தார்கள். அதனை நம்பி மக்களும் வாக்களித்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அதற்கு நேர் எதிராக, எதற்கெடுத்தாலும் விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறார்கள்.

சென்னை –  சேலம் எட்டு வழி விரைவுச் சாலை திட்டத்தை முடக்கியவர்கள், இப்போது, அதிகாரம் கைக்கு வந்ததும் விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறார்கள். வளர்ச்சித் திட்டங்களையும், தொழில் வளர்ச்சியும் சாத்தியமாக்க வேண்டுமானால் நிலங்களை கையகப்படுத்தி தான் ஆக வேண்டும் என்று தி.மு.க. அமைச்சர்கள் இன்று விரிவுரை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்தில் உள்ள சிறுமுகையில், தொழிற்பேட்டை அமைப்பதற்காக சுமார் 4,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தவிர, பவானி சாகர் அணைக்கு அருகில் 1,084 ஏக்கரில் தொழிற்பேட்டையும் அமைக்க தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பேட்டையால் நிலத்தடி நீர் மாசடைந்து அப்பகுதி முழுவதுமே விவசாயம் பெருமளவு  அழிந்துவிட்டது. இதனால், சிறுமுகை மற்றும் கீழ்பவானி பகுதியில் உள்ள விவசாயிகளும் பொதுமக்களும் பெரும் அச்சமடைந்துள்ளனர். ஏனெனில் இப்பகுதிகளில் முழுக்க, முழுக்க விவசாய நிலங்கள் தான் உள்ளன.

புதிதாக தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால், கீழ்பவானி, தடப்பள்ளி – அரக்கன்கோட்டை, காளிங்கராயன் பாசன கால்வாய்கள் மூலம் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

எனவே விவசாய நிலங்களை அழித்துவிட்டு தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை தி.மு.க. அரசு கைவிட வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின், எதற்கெடுத்தாலும் ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று கூறி வருகிறார். கொடுத்த வாக்குறுதிக்கு நேர் எதிராக செயல்படுவது தான் திராவிட மாடல் ஆட்சி போலும்.

விவசாயிகள், பொதுமக்கள் மீது கொஞ்சமும் அக்கறை இல்லாமல், விவசாய நிலங்களை கையகப்படுத்த துடிக்கும் தி.மு.க. அரசு, ஆட்சியில் இல்லாத போது வளர்ச்சி திட்டங்களை முடக்கியதற்காக, போலி சுற்றுச்சூழல் ஆர்வலர்களை தூண்டி விட்டு, தமிழகத்தின் அமைதியை கெடுத்ததற்காக, தொழில் வளர்ச்சியை முடக்கியதற்காக, தமிழக மக்களிடம் தி.மு.க. பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.