பொங்கல் பரிசு தருவதில் திமுக அரசு தடுமாற்றம் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கோவை சிவானந்தா காலனி பகுதியில் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள சொத்துவரி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, பால் விலை கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும், கோவை மாவட்டத்தில் சாலைகள், மேம்பால பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தியும் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டம் மாலை வரை நடைபெறுகிறது.

இந்த போராட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெறுகிறது. உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் முதல்வரும் கழக இடைக்கால பொது செயலாளருமன எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.

இதில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள பொதுமக்கள் என சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: இந்த 18 மாத கால ஆட்சியில் கோவை மாவட்ட மக்களுக்கு என்ன திட்டம் கொண்டுவரப்பட்டது தமிழக மக்கள் என்ன பயன் பெற்றார்கள்? என கேள்வி எழுப்பினார். 10 ஆண்டு அதிமுக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி, ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதிமுகவை பேச தமிழக முதல்வருக்கு தகுதி கிடையாது.

அதிமுக ஆட்சியில் குடிமராமரத்து திட்டம், தடுப்பணைகள், பில்லூர் 3 வது குடிநீர் திட்டம், அத்திகடவு அவிநாசி திட்டம் போன்ற சில திட்டங்கள், மேம்பாலங்கள், புதிய அரசு மருத்துவ கல்லூரிகள், அரசு கலை கல்லூரிகள் கொண்டுவரப்பட்டதாக கூறிய அவர் இது ஸ்டாலின் கண்களுக்கு தெரியவில்லையா என கேள்வி எழுப்பினார்.

கோவையில் மேம்பாலங்கள், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் போன்ற பல்வேறு திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. அன்னூரில் விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும். திமுக ஆட்சியில் கோவை மாவட்டம் முழுவதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கோவை மாநகர சாலைகள் சீரமைப்பு பணிகள் கைவிடப்பட்டதால் சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாய் காட்சியளிக்கிறது.

சொத்துவரி, மின்கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின்கட்டண உயர்வை கைவிட வேண்டும். மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய மின் படிபடியாக உயர்த்தலாம். கட்டுமான பொருட்களின் விலை, பால்விலை ஆகியவற்றையும் உயர்த்தி விட்டதாகவும் கூறினார்.

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு தர வேண்டும். செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு வழங்குவதை கைவிட வேண்டும். ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் ரத்து விவகாரத்தில் நாங்கள் செய்ததைத்தான் திமுக அரசும் செய்துள்ளது. 7.5% உள் ஒதுக்கீடை கொண்டு வந்தது அதிமுக தான். திமுக ஆட்சி வரும்போது எல்லாம் சட்ட ஒழுங்கு கெட்டுவிடும்.

பல ஆண்டுகால காவிரி நதி நீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டதும் அதிமுக தான். தற்பொழுது அதிமுகவிலிருந்து சென்று திமுகவில் அமைச்சர்களாக எம்.எல்.ஏக்களாக உள்ளவர்கள் திமுக பேச்சைக் கேட்டு தவறான செயல்களை செய்ய வேண்டாம்.

வருகின்ற 9 ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும், 13 ம் தேதி நகராட்சி மாநகராட்சிகளிலும், 12 ம் தேதி ஊராட்சி ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

40 இடங்களிலும் நாடாளுமன்ற தேர்தலில் வெல்வோம் என தெரிவித்தார். மேலும் பொங்கல் பரிசு தருவதில் இந்த அரசு தடுமாறி வருவதாக தெரிவித்தார்.

போராட்டத்தில் எஸ்.பி.வேலுமணி, திமுக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாகவும் கோவையை புறக்கணிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கோவையில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரபட்ட திட்டபணிகளை முடக்கி விட்டதாக கூறினார். திமுக இந்த ஒன்றரை ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பினார். மேலும் எடப்பாடியார் முதல்வராக வந்தால் தான் விடிவுகாலம் கிடைக்குமென தெரிவித்தார்.