தேர்தலை முன்னிட்டு டெல்லியில் மது விற்பனைக்கு தடை

தலைநகர் டெல்லியில் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தல் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 7ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தோ்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் வாக்குப்பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

அந்தவகையில் தேர்தலை பாதுகாப்பாக நடத்த மூன்று நாட்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று கலால் வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி டிசம்பர் 2 ம் தேதி மாலை 5.30 மணி முதல் டிசம்பர் 4ம் தேதி மாலை 5.30 மணி வரை கடைகள், பார்கள், கிளப்புகளில் மதுவிற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் டிசம்பர் 7ம் தேதியும் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.