கோவையில் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவையில் இனாமாக கொடுக்கப்பட்ட நிலங்களை கையகப்படுத்தும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் சொத்துக்கள் விவசாயிகளுக்கு இனாமாக கொடுக்கப்பட்ட நிலையில் அதற்கான உரிமை பட்டா வழங்கப்பட்டது. இதனிடையே இந்து சமய அறநிலையத்துறையினர் இனாமாக கொடுக்கப்பட்ட நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.

இதனை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் இனாம் விவசாயிகள் இயக்கத்தினர் கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து விவசயிகள் கூறுகையில், “தமிழ்நாடு அரசு 1963 ல் இனாம் ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து நிலத்தை உழுது கொண்டிருந்த உழவர்களுக்கு உரிமை பட்டா வழங்கியுள்ளது. ஆனால் அதிகாரிகள் இந்த நிலத்தை கையகப்படுத்த முயற்சிக்கின்றனர். நில உரிமை படைத்த உழவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி சட்டவிரோதமாக அறிவிப்புகளை அனுப்பி, அறநிலையத்துறை உழவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்க முயன்று வருகிறது. இதனை கைவிட வேண்டும்.” என்றனர்