அதிமுக சார்பில் உண்ணாவிரதம்: போராட்டம் நடைபெறும் இடத்தில் எஸ்.பி.வேலுமணி ஆய்வு

கோவையில் வரும் 2 ஆம் தேதி அ.தி.மு.க. சார்பாக உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற உள்ள நிலையில், போராட்டம் நடைபெற உள்ள இடத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திங்கட்கிழமை ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் சாலைகளை சீரமைக்க தவறியமைக்காகவும், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, கழிவு நீர் இணைப்பு கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவைகளை ஏற்படுத்தியமைக்காகவும், திமுக அரசை கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் வரும் 2 ஆம் தேதி,கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இதில் தலைமையேற்க உள்ள நிலையில், போராட்டம் நடைபெற உள்ள கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டத்திற்கான ஏற்பாடுகளை தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே. செல்வராஜ், அமுல் கந்தசாமி, முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.