உடல் உறுப்புகளை மண்ணுக்கு கொடுக்காமல் மனிதருக்கு கொடுப்போம்!

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் விழிப்புணர்வு

தேசிய உடல் உறுப்பு தான தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பி.எஸ்.ஜி.ஐ.எம்.எஸ்.ஆர் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து “உடல் உறுப்பு தான” விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

இதில் பள்ளி குழந்தைகளுக்கான ஓவியம், கவிதை, பேச்சு போட்டிகளும், கல்லூரி மாணவர்களுக்கான குறும்படம்/ரீல்ஸ், மைம், TABLEAU, ஃப்ளாஷ் மாப், பேச்சுப்போட்டிகளும் நடைபெற்றன.

இதில் சாலை விபத்துக்களில் மூளைசாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன்வர வேண்டும் என மாணவர்களின் நாடகம் மூலமாக வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடந்து ‘சாலை பயண பாதுகாப்பு விழிப்புணர்வு’ மற்றும் ‘உடல் உறுப்பு தான விழிப்புணர்வு’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

உங்களுக்கான சமூகப் பொறுப்பை உணருங்கள்!

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் பரிமளம் ‘பயண பாதுகாப்பு விழிப்புணர்வு’ என்ற தலைப்பில், சாலை விதிமுறைகள் அனைத்தும் நமக்கு தெரிந்தும் அதை கடைபிடிப்பதும், மதிப்பதும் இல்லை.

நேரம் ஆகிவிட்டது என வண்டியில் பணிக்கு அவ்வளவு வேகமாக சாலையில் செல்கிறோம். இந்த அவசரத்தினாலும், பதட்டத்தினாலும் விபத்துகள் நேருகின்றன. ஆனால் இதற்கு தீர்வாக இருப்பது வீட்டில் இருந்து சற்று நேரத்துடன் சேர வேண்டிய இடத்திற்கு செல்லவேண்டும்.

நமக்கான சமூக கடமையை உணர்ந்து சாலையில் பிறருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் செல்லவேண்டும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதன் மூலம் ஏற்படும் விபத்தினால் இன்னொரு குடும்பமும் பாதிப்படைக்கிறது என்பதை உணர வேண்டும்.

இளைஞர்கள் சாலைகளில் அதிவேகமாக செல்கின்றனர். அதிலும் ஆபத்தான சாகசங்களை செய்கின்றனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே வாகனம் ஓட்ட அனுமதிக்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.

அஜாக்கிரதையும் அலட்சியமுமே விபத்துக்கு காரணம்!

தொடர்ந்து இதே தலைப்பில் பி.எஸ்.ஜி தொடக்கப் பள்ளி ஆசிரியர் சிவசக்தி வடிவேல் பேசுகையில்: சாலைப் பயணங்கள் இன்று நிறைய உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் அதிகப்படியான சாலை விபத்து நிகழ்கிறது. இதனால் உயிரிழப்பும் அதிகம் ஏற்படுகிறது.

பெரும்பான்மையான விபத்துக்கு காரணமாக இருப்பது மனிதர்களின் அஜாக்கிரதையும், அலட்சியமும் தான். கண் இமைப்பதற்கும் குறைவான நேரத்தில் நடக்கும் விபத்தினால் ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரமே பாதிக்கப்படுகிறது.

சாலையில் ஓரமாக செல்பவர்கள் கூட, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவரால் பாதிக்கப்படுகிறார். இன்றைய இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் அதி வேகமாக செல்கின்றனர். அவர்களுக்கான சமூக பொறுப்பை உணர்வது அவசியம்.

குழந்தைகளுக்கு இரு சக்கர வாகனம் கொடுப்பது பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. 18 வயதுக்கு கீழானவர்கள் வண்டி ஓட்டக் கூடாது. பெற்றோர்களும் இதற்கு அனுமதி தரக் கூடாது.

உறுப்பு தானம் மூலம் மண்ணில் மீண்டும் வாழ்வோம்!

பி.எஸ்.ஜி தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் சொர்ணா லதா, ‘உறுப்பு தான விழிப்புணர்வு’ தலைப்பில் பேசியதாவது, உடல் ஆரோக்கியத்தில் மிகவும் முக்கியமான உறுப்பு மூளை. ஆளுமைக்கும், அறிவாற்றலுக்கும் மையமாக மூளை திகழ்கிறது. நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த பெருமூளை உதவியாகவும், சமநிலையில் இருக்க சிறு மூளையும் உதவுகிறது.

விபத்தில் மூளைச் சாவு அடைந்த ஒருவரால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியாது. அவரது உடல் அசைவற்று கிடைக்கும். இந்த சூழலில் அவரின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்கலாம். உடல் பிரியும் தருவாயில் சாகப்போகும் மனிதனுக்கு அந்த உறுப்புகளை கொடுத்து உதவலாம்.

5 லட்சம் மக்கள் உடல் உறுப்பு கிடைக்காமல் இறக்கின்றனர். மூளைச் சாவு அடைந்த ஒருவரால் எட்டு பேருக்கு மீண்டும் மறுவாழ்வு அளிக்க முடியும். இறந்த பின்பும் உடல் உறுப்பு தானம் மூலம் இந்த மண்ணில் மீண்டும் வாழ்வோம் என உடல் உறுப்பு தான உணர்வு பற்றி எடுத்துரைத்தார்.

மண்ணுக்குப் போகும் உடல் மனிதருக்கு பயன்படட்டும்!

தொடர்ந்து ‘உறுப்பு தான விழிப்புணர்வு’ தலைப்பில் பி.எஸ்.ஜி தொடக்கப்பள்ளியின்ஆசிரியர் கண்ணன், மனிதருக்கு பல தனித்துவ குணம் உள்ளது. அதில் தானம் செய்வது என்ற உயரிய குணம் மனித இனத்திற்கு மட்டுமே உண்டு.

நம் உடலில் தலை முடி, நகம் தவிர மீண்டும் வெட்டினால் வளரக்கூடிய உறுப்பாக கல்லீரல் உள்ளது. இத்தகைய படைப்பை இறைவன் நமக்கு கொடுத்துள்ளார்.

அதுபோல சிறுநீரக தானம் முதன்மை பெறுகிறது. நம் சிறுநீரகம் 150 லிட்டர் ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. அதனால் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளது என அலட்சியம் செய்யாமல் அதனை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

உடல் உறுப்பு தானம் செய்யும்போது அதில் ஒருவரின் தியாக உணர்வு மேலோங்கி இருக்கிறது. மேலும் மனிதரின் உடல் நிலையானதும், நமக்கு சொந்தமானதும் அல்ல. அது ஒரு மாயை, ஆன்மா மட்டுமே நம்முடையது.

எனவே மண்ணுக்குப் போகும் உடல் மனிதருக்கு பயன்படட்டும் என இயற்கையில் இருந்து பெற்றதை இயற்கைக்கு கொடுப்போம் என அறிவுறுத்தினார்.

மனித குணமே முதன்மையானது!

நடுவராக பங்கேற்ற வழக்கறிஞர் நந்தகுமார், சாலை பாதுகாப்பு மற்றும் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு ஆகிய இரண்டு தலைப்பிலும் நடைபெற்ற பட்டிமன்றத்தில் மனிதருடைய குணம்தான் இவை இரண்டையும் இயக்குகிறது எனக் கூறி மனித குணத்தை வளர்க்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் பி.எஸ்.ஜி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என தனது வரவேற்புரையில் கூறினார்.

நிகழ்விற்கு தலைமை தாங்கி பேசிய பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், பி.எஸ்.ஜி மருத்துவமனையில் 100 பேர் உறுப்பு தானத்திற்காக காத்திருப்பதாகவும், இதுவரை இங்கு 360 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்

தொலைபேசி மற்றும் தலைக்கவசம் அணியாமல் இருப்பது சாலை விபத்துக்கு முக்கிய காரணமாக இருப்பதாக அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது: உறுப்பு தானம் என்பது நம் கலாச்சாரத்தில் ஏற்கனவே உள்ள ஒன்றுதான், புதிதானது அல்ல.

சாலை விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காததால் விபத்தினால் உயிரிழப்பு ஏற்படுகிறது. நமது ஆரோக்கியம் சிறந்ததாக இருந்தால் உறுப்பு தானத்திற்கான தேவை குறையும். இருக்கும் உறுப்புகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

உண்ணும் உணவுப் பொருளில் உள்ள பூச்சிக்கொல்லி உடல் உறுப்புகளை எளிதாக பாதிக்கிறது. அதிகப்படியான மன அழுத்தமும் ஒருவரின் உடல் நலனை பாதிக்கிறது.

பிறவியிலேயே உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுவது எதிர்பாராமல் நடக்கும் ஒன்று. இது நமது கட்டுப்பாட்டை தாண்டி வருவதாக உள்ளது. இப்படி குறைபாடு உள்ளவர்களுக்கு உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டியது நமது கடமை எனப் பேசினார்.

ரியல் ஹீரோக்களுக்கு ஒரு சல்யூட்!

நிகழ்ச்சியில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் உடல் உறுப்பை தானம் செய்ய முன்வந்த குடும்பத்தினர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், கடந்த வாரம் மதுரையில் இருந்து கோவைக்கு இருதயத்தை 2 மணி நேரம் 35 நிமிடத்தில் கொண்டுவர உதவிய கோவை போக்குவரத்து காவல்துறையை சேர்ந்த சரவணன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இருதயத்தை கோவைக்கு தகுந்த நேரத்தில் எடுத்து வர உதவிய ஆம்புலன்ஸ் டிரைவர்களான சிவராஜ், மோகன்ராஜ், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து உடல் உறுப்பு தான விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் சுப்பா ராவ், மருத்துவர்கள், செவிலியர் கல்லூரி முதல்வர் ஜெயசுதா, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.