பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் “மானுட அமைதி மகளிர் பாதுகாப்பில் உள்ளது!”

காலம் காலமாக உருவாக்கப்பட்ட ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பு, பெண்கள் ஆண்களுக்கு கீழானவர்கள் என்ற தவறான கற்பிதங்களும், படிக்கும் பெண்களின் மீதான வெறுப்புக்கு காரணமாகிறது என முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன் தெரிவித்துள்ளார்.

‘சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்’ நவம்பர் 25 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள் தோன்றிய வரலாறு குறித்தும், காலம் காலமாக பெண்கள் மீதான அடக்குமுறை பற்றியும் முகமது ஜியாவுதீன் பகிர்ந்து கொண்டதாவது:

டொமினிக்கன் குடியரசில் 1960 நவம்பர் 25 ல் மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ரபாயெல் டுருஜிலியோவின் (1930-1961) உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்கள் அந்நாட்டில் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் என்பதுதான் அந்த சகோதரிகளின் கொலைக்கான காரணமாகும்.

‘மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்’ என்று உலகமெங்கும் அழைக்கப்பட்ட மிராபெல் சகோதரிகள் லத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள்.

1980ம் ஆண்டிலிருந்து நவம்பர் 25 ம் நாள் அந்த சகோதரிகளின் படுகொலையை நினைவு கூர்வதற்காகவும், பெண்களின் மீதான பாலின பாகுபாடு மற்றும் வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் தேர்வு செய்யப்பட்டது.

1999 டிசம்பர் 17ம் தேதி ஐக்கிய நாடுகள் சபை மிராபெல் சகோதரிகள் நினைவாக ஒவ்வொரு வருடமும் நவம்பர் 25ம் தேதியை சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினமாக கடைப்பிடிப்பது என்று தீர்மானித்தது.

மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்து “காலங்காலமாய் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான சமனில்லா செல்வாக்கின் வெளிப்பாடே பெண்களுக்கு எதிரான வன்முறையாகும்”; என்றும், “ஆண்களை விடத் தாழ்ந்தநிலைக்கு பெண்களைத் தள்ளும் இக்கட்டானச் செயற்பாடுகளுள் ஒன்று பெண்களுக்கு எதிரான வன்முறையாகும்.” என்றும் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கெதிரான வன்முறை குறித்து விரிவாக ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பு (WHO), வன்முறை பெண்களின் வாழ்நாளில், பிறப்பிற்கு முன்னர், மழலைப் பருவம், சிறுமியர், வளர்சிதை மாற்றம் மற்றும் வயது வந்தோர், முதியோர் ஆகிய ஐந்து நிலைகளிலும் நடப்பதாக கூறியுள்ளது.

பெண் என்பவள் பிறப்பதற்கு முன்பிருந்து சாகும்வரை வன்முறைக்கு உள்ளாகிறாள் என்பது வேதனைக்குரியது. இப்போதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் குறையவில்லை என்பதை விளக்கும் புள்ளி விபரங்கள் இன்னும் மனிதம் மலர பயணிக்க வேண்டிய தூரம் அதிகமிருப்பதை நமக்கு உணர்த்துகிறது.

மாபெரும் தலைவர்களாக, மனித குலத்தின் வழிகாட்டிகளாக, அறிவியல் கண்டுபிடிப்பாளர்களாக, எல்லா காலங்களிலும் பெண்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கவும் செய்கிறார்கள். ஆனாலும், இன்றும் பெண்களை சகமனுஷியாகக்கூட கருதாத ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

ஆண்டாண்டு காலமாக உருவாக்கப்பட்ட ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பு மற்றும் பெண்கள் ஆண்களுக்கு கீழானவர்கள் என்ற தவறான கற்பிதங்களும், படிக்கும் பெண்களின் மீதான வெறுப்புக்கு காரணமாகிறது.

அழகுப் பதுமைகளாகவும் அடிமையாகவும், நுகர்வுப் பொருளாகவும் பெண்களைப் பார்க்கும் ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட அறியாமை மூளையில் முள் முளைத்த முட்டாள்தனம் என்பதை உணரவேண்டும்.

நமக்கு தாயாகவும், சகோதரியாகவும், தோழியாகவும், மகளாகவும் நம்மோடு வாழ்வில் அங்கமாக உள்ள பெண்களை மதிக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை தடுக்க வேண்டும். பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.

சமூகத்தில் சரி பாதியாக உள்ள பெண்களுக்கு எதிரான வன்முறை ஆண்களின் வாழ்வையும் அழித்துவிடும் என்பதை உணர்வோம், உணர்த்துவோம். மானுட அமைதி என்பது மகளிரின் பாதுகாப்பில் உள்ளது என்பதே உண்மையாகும். அச்சம் இல்லாத துணிச்சல் மிக்க பெண்களே நாட்டை முன்னேற்றுவார்கள்.