டிசிஎல் இறுதிப்போட்டியில் கோவை பெடல்ஸ் அணி வெற்றி

சைக்கிளிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன், அண்ணாநகர் சைக்கிள்ஸ் மற்றும் பிராண்ட் பிளிட்ஸ் இணைந்து தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) முதல் சீசனின் இறுதிப்போட்டியை மெட்ராஸ் இண்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடத்தியது.

டிசிஎல் போட்டி இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்டம் ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்றது. டிசிஎல் இறுதிப்போட்டியில் கோவை பெடல்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

வெற்றி பெற்ற அணிக்கு சாம்பியன்ஷிப் கோப்பையுடன் 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. முதல் ரன்னர் அப் வென்ற ரேன்சைக்கர்ஸ் அணிக்கு ரூபாய் 2 லட்சமும், இரண்டாவது ரன்னர் அப் வென்ற மெட்ராஸ் ப்ரோ ரேசர்ஸ் அணிக்கு ரூபாய் 1 லட்சமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக நிப்பான் பெய்ன்ட் இந்தியா நிறுவனத்தின் அசோக் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கு பெற்றவர்களை கௌரவித்தார்.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற கோவை பெடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரீநாத், டிசிஎல் கோப்பையை வென்றது எங்கள் அணிக்கு பெருமையான தருணம். ஒவ்வொரு அணி வீரர்களின் பங்களிப்பும், கடின உழைப்பும் வெற்றிக்கு உதவியது. டிசிஎல் போன்ற போட்டிகள் சைக்கிளிங்கை ஒரு தொழில்முறை விளையாட்டாக எடுத்துக்கொள்ளவும், பல தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்கவும் ரைடர்களை ஊக்குவிக்கிறது. சாம்பியன்களாக, அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், ஒலிம்பிக் போன்ற பெரிய இலக்குகளை நோக்கி செல்லவும் ஒரு தளமாக உள்ளது என்றார்.

அண்ணாநகர் சைக்கிளிங் நிறுவனரும், மோட்டார் சைக்கிள் பந்தய வீரருமான சுதாகர், டிசிஎல் இணை நிறுவனர் லீலாராம், கோவை பெடல்ஸ் அணியின் உரிமையாளர் ரேக்கா, இந்திய சைக்கிள் கூட்டமைப்பின் தலைவர் ஓன்கார் சிங் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.