கே.பி.ஆர் கல்லூரியில் தொழில்நுட்ப உயர் ஆய்வு மையம் துவக்கம்

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பாக எல் அண்ட் டி நிறுவனத்தின் “எக்ஸ்பீரியன்ஸ் என்ஜினியரிங்” (உயர் தொழில்நுட்ப உயர் ஆய்வு மையம்) என்ற அருங்காட்சியகம் துவக்கவிழா நடைபெற்றது.

சுமார் 6 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் சிவில், மெக்கானிகல் மற்றும் எலக்ட்ரிக் அண்ட் எலக்ட்ரானிக்கல் என்ஜினியரிங் ஆகிய துறைகளில் உள்ள உபகரணங்கள், பொருட்கள், மற்றும் திட்ட மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு பள்ளி குழந்தைகள், பிற கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் இலவசமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

துவக்கவிழாவில் கே.பி.ஆர். குழும நிறுவனங்களின் தலைவர் கே.பி.ராமசாமி கலந்துகொண்டு, இந்த உயர் ஆய்வு மையத்தை பயன்படுத்தி மாணவர்கள் பல்வேறு தலைசிறந்த வடிவமைப்புகளை உருவாக்கி தேசத்திற்கு, உலகளாவிய பொறியியல் தொழில்நுட்ப சேவை கிடைக்குமாறு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சிறப்பு விருந்தினராக எல் அண்ட் டி எஞ்சினியரிங் உற்பத்தித்துறையின் துணைத் தலைவர் பால்குன் சோஷி கலந்துகொண்டு பேசுகையில்: இந்த மையத்தை நிறுவுவதற்காக கே.பி.ஆர் கல்லூரி எடுத்திருக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. எல் அண்ட் டி நிறுவனம் கே.பி.ஆர். கல்லூரியுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதில் பெருமகிழ்வு அடைவதாகவும், இந்த மையத்தை பார்வையிடும் அனைவரும் தொழில்துறையின் உச்சகட்ட தொழில்நுட்பங்களை கண்டிப்பாக காண முடியும் எனவும் தெரிவித்தார்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் ஸ்ரீவாரி சந்திரசேகர் கூறுகையில்: இது போன்ற உயரிய மையங்களை ஒவ்வொரு கல்லூரியும் தன்னகத்தே கொண்டிருந்தால் நாட்டில் மிகச் சிறந்த ஆராய்ச்சி நோக்குடன் கூடிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள் என்று குறிப்பிட்டார்.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் அகிலா, முதன்மை செயல் அதிகாரி நடராஜன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பல்வேறு தொழிற்சாலைகளை சார்ந்த மேலாளர்கள், வடிவமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அருங்காட்சியத்தை பார்வையிட விருப்பம் உள்ளவர்கள் kpriet.ac.in / experience-engineering என்ற இணையதள முகவரியிலோ அல்லது 88702 83186 தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து பார்வையிடலாம்.