மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்

– டாக்டர் ராஜசேகரன்

முடக்குவாதம் என்று சொல்லக் கூடிய ஆர்த்ரைட்டீஸ் நோய் வயதானவர்களை பெரும்பாலும் தாக்குகிறது. இதனால் நாளடைவில் கால் மூட்டில் ஜவ்வு தேய்மானம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலைக்கு இவர்கள் சென்று விடுகின்றனர்.

இதற்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. ஆனால் இது பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாமல் உள்ளது. எனவே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு கங்கா மருத்துவமனை மற்றும் ஜான்சன் & ஜான்சன் மெட்டெக் இந்தியா இணைந்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியால் இன்னும் சிறந்த சிகிச்சை அளிக்கும் அறுவை சிகிச்சை பற்றிய ஒரு அமர்வை ஏற்படுத்தினர்.

இதில் கங்கா மருத்துவமனையின் எலும்பு & முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் ராஜசேகரன் பேசுகையில்: இந்தியாவில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் சுமார் 80 லட்சம் பேரில் 2 லட்சம் பேர் மட்டுமே அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்ற தேவை இருந்தும், இவ்வளவு குறைவாக நடப்பதற்க்கான காரணம் மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமையே. இந்த அறுவை சிகிச்சைக்கான பலன் எப்படி இருக்கும், வாழ்நாள் முழுவதும் செயற்கை மூட்டு பாதுகாப்பாக இருக்குமா என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது.

ஆரம்ப நிலை ஆர்த்ரைட்டீஸ் உள்ளவர்களுக்கு பிசியோதெரபி போன்ற பல சிகிச்சைகள் உள்ளன. ஆனால் மூட்டு எலும்புகள் வளைந்து ஜவ்வு முழுவதும் தேய்ந்து, நடக்க முடியாத நிலைக்கு செல்லும்போது அறுவை சிகிச்சையே நல்ல தீர்வாக உள்ளது.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது மிகவும் வெற்றிகரமான செயல்முறையாக இருந்தாலும், ரோபோடிக் அசிஸ்டட் தொழில்நுட்பம் இந்த துறையில் அடுத்த மிகப்பெரும் கண்டுபிடிப்பாக உள்ளது. ரோபோ மட்டுமே தனியாக இந்த அறுவை சிகிச்சையை செய்யாது. இதன் உதவியால் செயற்கை மூட்டின் அளவை துல்லியமாக கணிக்க முடிவதோடு, தரவு பகிர்வு மூலம் மருத்துவர்களுக்கு துல்லியமான வழிகாட்டுதலை வழங்கும். இதனால் வலியின் தன்மை குறைவதோடு, நோயாளியின் குணமடையும் காலமும் குறைகிறது. கங்கா மருத்துவமனையில் இதுவரை 23 நோயாளிகளுக்கு வெற்றிகரமாக இந்த ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப உதவி மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை தமிழக அரசின் மருத்துவ காப்பீடு மற்றும் பிரதான் மந்திர் காப்பீட்டு திட்டம் மூலமும் செய்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

கங்கா மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சண்முகநாதன், ஜான்சன் & ஜான்சன் மெட்டெக் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சந்தீப்மக்கர் ஆகியோர் இந்த அமர்வில் கலந்துகொண்டனர்.