கற்பகம் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்கள் வரவேற்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார் தலைமை தாங்கினார், கல்லூரியின் முதல்வர் விஜயகுமார் வரவேற்புரை வழங்கினார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழறிஞர் ஞானசம்பந்தம் கலந்துகொண்டு பேசியதாவது: இன்றைய மாணவர்கள் கல்வியையும், ஒழுக்கத்தையும் இரு கண்களாகக் கருத வேண்டும். பொறியாளர்கள் தான் இந்நாட்டை உருவாக்குகிறார்கள், இயந்திரவியல் போன்ற பல்வேறு துறைகளில் நம் நாடு மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது.

எல்லோருக்கும் எல்லாவிதமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் இந்த அளவிற்கு ஒரு பெரிய கல்லூரியில் படிக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் பெற்றோர்கள். அவர்களைப் போற்றி வணங்க வேண்டும்.

நான்காண்டு என்பது நான்கு நிமிடங்கள் போல ஓடிவிடக்கூடியது. ஆகையால் கவனச்சிதறல் இல்லாமல் கற்க வேண்டும். மிகப்பெரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தவர்களும் சாதாரண நிலையில் இருந்து வந்தவர்கள் தான். ஆகையால் நீங்களும் பல புதுப்புது கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று நம்பிக்கையூட்டினார்.