கோவையில் மாணவர்களுக்கான பல் மருத்துவ திட்டம் துவக்கம்

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் காட்டன் சிட்டி, சிந்தி லேடீஸ் ஃபோரம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து குழந்தைகளுக்களுக்கான இ வேஸ் டு ஸ்மைல் வேஸ் (E Ways to Smile Ways) என்ற சிறப்பு பல் மருத்துவ முகாமினை தொடங்கியுள்ளன.

இம்முகாமின் துவக்க விழாவிற்கு கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் தலைமை வகித்தார். எஸ்.என்.ஆர் அறக்கட்டளை சி.இ.ஓ ராம்குமார், ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகிகள், ரோட்டரி கிளப் நிர்வாகிகள், சிந்தி மகளிர் மன்ற அமைப்பினர் ஆகியோர் முன்னிலையில் துவக்க விழா நடந்தது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை மூலம் பள்ளி வளாகத்திலேயே பல் பிரச்சனைகளைத் தடுக்கவும் சிகிச்சை செய்யவும் முகாம் அமைக்கப்படும். இதற்கான நிதியை கோயம்புத்தூர் காட்டன் சிட்டியின் ரோட்டரி கிளப் மற்றும் சிந்தி மகளிர் மன்றம் கோயம்புத்தூர் இணைந்து வழங்கும்.

கோவையில் உள்ள 18 மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் 3 முதல் 6 மாதங்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான நிதியானது மின் கழிவு சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி மூலம் திரட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏறத்தாழ 1500 ஆரம்பப்பள்ளி மாணவர்கள் பயனடைவர்.