சவால்களுக்கு சவால் விடும் துபாய் – கவிதாசன்

எழுமின் என்ற அமைப்பு உலகத் தமிழ் தொழில் முனைவோருக்கான மூன்று நாள் மாநாட்டை அண்மையில் துபாயில் நடத்தியது. உலகத் தமிழ் தொழில்முனைவோர்களின் சங்கமமாக இந்த மாநாடு நடைபெற்றது. பல நாடுகளில் இருந்து ஏறக்குறைய சுமார் 500 பேர் இதில் பங்கேற்றனர்.

எழுமின் அமைப்பின் நிறுவனர் அருட்தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ் இம்மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார். அமெரிக்காவில் உள்ள தொழிலதிபர் ராமன்வேலு இந்நிகழ்வை ஒருங்கிணைத்து ரூட்ஸ் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு துறை இயக்குனரும், சிந்தனை கவிஞருமான கவிதாசன் அவர்களை அழைத்திருந்தார்.

இந்த நிகழ்வின் தொடக்க விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்துகொண்டு பேசினார். அன்று மாலை நடந்த நிகழ்வில் சிந்தனை கவிஞர் கவிதாசன் “ஓங்கித் தமிழ் வாழும் உலகை இனிது ஆளும்” என்ற தலைப்பில் பேசினார்.

அந்த நிகழ்வில் அவர் பேசியதன் சுருக்கம்: தொழிலில் வெற்றி அடையவேண்டும் என்றால் மனிதவளம் முதலில் சரியாக இருக்கவேண்டும். ஒரு நிறுவனத்தை இன்னொரு நிறுவனத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது உற்பத்தி பொருளோ, உற்பத்தி முறையோ, அங்கு இருக்கும் கட்டிடங்களோ, இயந்திரங்களோ அல்ல. அங்கே வேலை செய்யக்கூடிய மனிதர்கள் தான். அவர்கள் தான் நிறுவனத்தை தனித்துவமாக காட்டுகிறார்கள். மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பேசினார்.

மேலும், தகவல் தொடர்பு திறன், பன்முக சிந்தனைத் திறன், படைப்பாற்றல் திறன், ஒருங்கிணைந்து செய்லபடும் திறன் ஆகிய நான்கையும் பெற்றவர்களாக வேலை செய்யக்கூடிய பணியாளர்களை உருவாக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் அங்கு நம் நாட்டை சேர்ந்த தணிக்கையாளர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மற்றுமொரு நிகழ்விலும் அவர் கலந்துகொண்டார். “தொழில், குடும்பம், சமுதாயம் என்ற மூன்று நிலைகளையும் சார்ந்துதான் வாழ்க்கை உள்ளது. தொழிலில் வெற்றி அடைய அறிவுரீதியான அணுகுமுறையும், குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அன்பான அணுகுமுறையும், சமுதாயத்தில் மதிப்புடன் இருப்பதற்கு நல்ல பண்புகளுடன் இருக்க வேண்டும்” என அங்கு பேசினார்.

உலகத் தமிழ் தொழில்முனைவோர் மாநாடும், துபாய் பயணமும்: 

துபாயில் நடைபெற்ற மாநாடு குறித்தும், தனது பயண அனுபவம் பற்றியும் கவிதாசன் பகிர்ந்து கொண்டதாவது:  பல நாடுகளில் உள்ள தமிழ் தொழில் முனைவோர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். அனைத்து தமிழ் தொழில் முனைவோர்களும் ஒரு இடத்தில் ஒன்று சேரும்போது அவர்களுக்கான வியாபார வாய்ப்புகள் பெருகுகின்றன.

தமிழ்நாட்டில் இருந்து உலக நாடுகளுக்கு சென்று அந்நாட்டின் கலாச்சாரத்தையும், மொழியையும் கற்றுக்கொண்டு, சிறப்பாக தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்-அல்-குவைன், ராஸ்-அல்-கைமா மற்றும் ஃபுஜைரா ஆகிய ஏழு எமிரேட்களை உள்ளடக்கியது தான் UAE. இதில் துபாய் சுற்றுலா வருபவர்களை அதிகம் கவரும் நாடாக உள்ளது.

துபாய் மிகவும் சுறுசுறுப்பான நகரமாக இருக்கிறது. அங்கு எந்தவிதமான இயற்கை வளங்களும் கிடையாது. ஆனால் ஒரு நாடு முன்னேறுவதற்கு என்னென்ன காரியங்களை செய்ய வேண்டுமோ அதை அனைத்தையும் அந்த நாட்டின் மன்னராக இருந்த ஷேக் முகமது 20 வருடங்களுக்குள்ளேயே செய்துள்ளார்.

துபாய் உலகத்தின் மையப் பகுதியாக உள்ளதால் எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் 6 மணி நேரத்திற்குள் போய்விடலாம். வணிகமும், வியாபாரமும் அங்கு சிறப்பாக உள்ளது. எமிரேட்ஸில் 20 % தான் அந்த மண்ணின் மக்கள் உள்ளனர். 80 % மக்கள் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இங்கு வசிக்கின்றனர். பன்மொழி பேசக்கூடிய பல திறமை உள்ளவர்கள் திறமையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

ஷார்ஜாவில் நடைபெற்ற உலக புத்தக கண்காட்சியில் நான் கலந்துகொண்டேன். அதில் 48 நாடுகளில் இருந்து, 2000 அரங்குகளில் 80 மொழிகளில் புத்தகங்கள் குவிந்துகிடந்தன. தமிழ்நாட்டில் இருந்து மூன்று அரங்குகள் இடம் பெற்றிருந்தன. தமிழ் புத்தகங்களை விரும்பி வாசிக்கின்றனர். அங்கு வாசிப்பு பழக்கத்தை குழந்தைகளிடம் ஊக்குவிக்கின்றனர்.

துபாயில் நிறைய பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. அங்குள்ள வானளாவிய கட்டிடங்கள் நம்மை மிரள வைக்கின்றன. மணல் சவாரி ஒரு சுவாரசியமான பயணமாக இருக்கும். எப்போதும் சுறுசுறுப்பாகவும், செய்கின்ற வேலையை நேர்த்தியாகவும் அங்குள்ள மக்கள் செய்கின்றனர். அவர்களிடம் இருந்து நாம் அதனை கற்றுக்கொள்ள வேண்டும்.

சாலையில் வாகனங்கள் மிகவும் கட்டுப்பாடுடன் செல்கின்றன. பாதசாரிகள் சாலையை கடக்க நின்றாலே அனைத்து வண்டிகளும் நின்றுவிடும். சாலை விதிகளை மீறுவதை எங்கும் காணமுடியவில்லை. மிக முக்கியமாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நல்ல பாதுகாப்பு உள்ளது.

சுதந்திரத்துடன் கூடிய ஒழுக்கம் அவசியம்!

ஒரு சிறந்த தொழில் முனைவோருக்கு தொழில்நுட்ப அறிவு இருக்க வேண்டும். அவர் தொடங்கும் திட்டத்தில் முழு ஈடுபாட்டுடன் இருக்கவேண்டும். தோல்வி, வெற்றி ஆகிய இரண்டையும் சரியாக கையாளவேண்டும்.  உழைப்பதில் ஆர்வமும், தொலைநோக்குடன் செயல்படக் கூடிய தன்மையும் இருக்க வேண்டும்.

பணியாளர்களின் தேவைகளை முதலாளிகள் பூர்த்தி செய்யவேண்டும். அவர்களை ஊக்கப்படுத்தி கற்றுக் கொள்வதற்க்கான வாய்ப்பு கொடுத்து, படிப்படியாக உயரக்கூடிய நிலையை ஏற்படுத்தி தரவேண்டும்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நம் நாட்டில் அனைத்து வளங்களும் உண்டு. மொழி, இனம், மதம் ரீதியாக பிரிந்து இருந்தாலும், இந்தியர்கள் என்ற ஒருமைப்பாட்டுடன் வாழ்கிறோம். இன்னும் கொஞ்சம் சுயக் கட்டுப்பாடு, சுய ஒழுங்கு சேர்ந்தால் நாம் தான் சிறந்தவர்கள். அப்படி உலகமே போற்றக்கூடிய நாடாக விரைவில் உருவாவதற்கு அனைவரும் ஒன்றுக் கூடி உழைக்க வேண்டும் எனக் கூறினார் கவிதாசன்.