ஆதார் இணைக்காவிட்டால் இலவச மின்சாரம் ரத்து என்பது அவதூறான கருத்து

– அமைச்சர் செந்தில் பாலாஜி

ஆதார் இணைக்காவிட்டால் இலவச மின்சாரம் ரத்து என்பது அவதூறான கருத்து என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது: மின் நுகர்வோரிடத்தில் ஆதார் எண் இணைப்பு என்பது மின் துறையில் நிகழ் காலத்திற்கு ஏற்ப மேம்படுத்துவதற்கான நடவடிக்கை. மின்துறையில் 1 கோடியே 15 லட்சம் தரவுகள் மட்டுமே இருந்தது.

தற்போது 3 கோடிக்கும் மேற்பட்ட மின் நுகர்வோரின் தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு மின் இணைப்புகளில் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என கணக்கிடப்பட வேண்டும், மின்சாரம் எவ்வளவு உற்பத்தி செய்யப்படுகிறது, தனியார் கொள்முதல் மற்றும் மின் விநியோகம் செய்யப்படும் அளவு, கட்டண அளவுகள் கணக்கிடப்பட்டு மின் துறையை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காகவே ஆதார் இணைப்பு.

ஆதார் இணைக்காவிட்டால் இலவச மின்சாரம் ரத்து என்பது மிக அவதூறான கருத்துக்கள். ஆதார் எண் இணைப்பு என்பது கட்டாயம். இப்போதுள்ள மின் வினியோகத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது.

மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களை யாரும் வெளியிட வேண்டாம். இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.

ஏற்கனவே ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது 6 மாதத்தில் நிறைவடைந்தது.

அதனை அடுத்து தற்போது கரூரில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. 100 நாட்களுக்குள் 50 ஆயிரம் விவசாயிகளுக்கும் முழுமையாக இலவச மின் இணைப்பு வழங்கப்படும்.
50 ஆயிரமாவது மின் இணைப்பு பெறும் விவசாயி முதல்வர் கையால் பெறுவார்.

கடந்த 10 ஆண்டுகளில் கோவையில் நடைபெற்ற திட்டங்களை விட இந்த 5 ஆண்டுகளில் வளர்ச்சித் திட்டங்கள் கோவைக்கு வரவழைக்கப்படும்.

தற்போது 2 லட்சம் மின் கம்பங்கள், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் கையிருப்பு உள்ளது. பருவமழையை சமாளிக்க முன் ஏற்பாடுகள் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

ஜூன் முதல் அக்டோபர் வரை பழுதடைந்த 44 ஆயிரம் மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளது. இதுபோல 14 லட்சத்து 69 ஆயிரம் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மழையை எதிர்கொள்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த காலத்தைப் போல் இந்தமுறை மழைக்காலத்தில் மின் விநியோகம் தடைபடவில்லை. கோவைக்கு கடந்த ஒன்றரை ஆண்டில் 211 கோடி ரூபாய் சாலை பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 26 கோடி ரூபாய் முதற்கட்டமாக வந்து சேர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பணிகள் நடைபெறும் மீதமுள்ள நிதி வருகிற மார்ச் மாதத்திற்குள் வந்து சேரும். சட்ட விதிமுறைப்படி டெண்டர் விடப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டில் 2 லடசத்து 20 ஆயிரம் மின் இணைப்புகள் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஒன்றரை ஆண்டில் ஒரு லடசத்து 50 ஆயிரம் பேருக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கடந்த 10 ஆண்டுகளில் கோவையில் செய்யாத பணிகளை நாங்கள் செய்வோம் என தெரிவித்தார்.