கோவையில் போர்டபிள் எக்ஸ்ரே கருவி அறிமுகம்

கோவை: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கோவையைச் சேர்ந்த நிறுவனம் எங்கு வேண்டுமென்றாலும் எடுத்துச் சென்று எக்ஸ்ரே எடுக்கத்தக்க வகையில் போர்டபிள் எக்ஸ்ரே இயந்திரத்தை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது.

கோவை சின்னவேடம்பட்டியில் ஐயடோம் எலெக்ட்ரிக் இந்தியா என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே இயந்திரங்களை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.

நமது உடலில் எலும்பு முறிவு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டால் எக்ஸ்ரே எடுப்பதற்காக மருத்துவமனை செல்ல வேண்டிய சூழலை மாற்றி எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லத்தக்க  போர்டபிள் எக்ஸ்ரே இயந்திரத்தை யடோம் எலெக்ட்ரிக் இந்தியா நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர்.

அலீரிரோ ஸ்மார்ட் 1600 என்ற இந்திய புதிய எக்ஸ்ரே இயந்திரமானது எலும்புகள் தொடர்பான எக்ஸ்ரே படங்களை துல்லியமாக எடுக்கும் திறனை கொண்டுள்ளது. இந்த புதிய இயந்திரத்தின் அறிமுகம் கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது.

இதில் ஐயடோம் எலெக்ட்ரிக் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்கள் பிஜூநாதன், லாவண்யா, ரேடியாலஜிக் பிஸிக் பவுண்டேசனின், தலைவர் குப்புசாமி தயாளன், சொசைட்டி ஆஃப் இந்தியன் ரேடியாலஜிஸ்ட் அண்ட் டெக்னாலஜிஸ்ட் அமைப்பின் தலைவர் வீரன் குட்டி ஆகியோர் கலந்து கொண்டு இந்த புதிய எக்ஸ்ரே இயந்திரத்தை அறிமுகப்படுத்தினர்.

இது குறித்து ஐயடோம் எலெக்ட்ரிக் இந்தியா இயக்குனர் பிஜூநாதன் கூறுகையில், “மிகவும் எளிய முறையில் கையாள கூடிய இந்த எக்ஸ்ரே இயந்திரம் மின்சாரம், மற்றும் பேட்டரி மூலமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கருவியில்  உள்ள அனைத்து பாகங்களையும் எளிதில் கழற்றவும், எளிதில் மாட்டவும் முடியும். இதனை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று எக்ஸ்ரே எடுக்கலாம்.

கிராமப் புற பகுதிகளுக்கும், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும்  மருத்துவ முகாம் நடத்தச் செல்லும் நேரங்களில் அங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மார்பகம், கை, கால், போன்றவற்றின் எக்ஸ்ரேகளை உடனடியாக எடுக்கும் தன்மை கொண்டது. அவரச ஊர்தி வாகனங்களில் கூட இதனை பயன்படுத்தலாம். இதனால் கால  விரயம் தவிர்க்கப்படும். இயந்திரத்தின் அறிமுகத்தை தொடர்ந்து இங்கு மருத்துவம் சார்ந்த மாணவர்களை அழைத்து அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தியுள்ளோம். புதிய மருத்துவக்கருவிகளை கையாள இது போன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களை மேம்படுத்தும்.” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், குப்புசாமி நாயுடு மருத்துவமனையின் பயோ மெடிக்கல் பிரிவு மேலாளர் ஆனந்தி குமாரவேல், ஐயடோம் எலெக்ட்ரிக் இந்தியா தலைவர் உத்தமச்சந்திரன் , துணை பொது மேலாளர் மோகன்தாஸ், ஒருங்கிணைப்பாளர் சுபா மற்றும் வெவ்வேறு கல்லூரிகளில் பயோ மெடிக்கல் துறையில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.