240 கிலோமீட்டர் 2.35 மணி நேரத்தில் பயணம்

சவாலான சாலையில்  இருதயம் காத்த பி.எஸ்.ஜி

இருதய மருத்துவ சிகிச்சையில் தனித்துவம் பெற்று விளங்கும் பி.எஸ்.ஜி மருத்துவமனையில் அளிக்கப்படும் அதிநவீன சிகிச்சை முறையினாலும், திறமைமிக்க மருத்துவக் குழுவினராலும் பல இருதயங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. அந்த வகையில் இங்கு மூன்றாவது முறையாக இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

தற்போது இருக்கும் போக்குவரத்து நெரிசலில் அருகில் இருக்கும் இடத்திற்கு செல்லவே சில மணி நேரங்கள் ஆகும் என்ற நிலையில், விபத்தில் மூளை சாவடைந்த ஒருவரின் இருதயம் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக கோவைக்கு 2 மணிநேரம் 35 நிமிடத்திற்குள்ளாக கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், கொடையாளியிடம் இருந்து பெறப்பட்ட உறுப்பின் பயண நேரம் மற்றும் அறுவை சிகிச்சை என நான்கு மணி நேரத்திற்குள்ளான குறுகிய காலத்திற்குள் நோயாளிக்கு இருதயம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சாதனைக்குப் பின்னால் ஒரு பெரிய குழுவே தங்களை அர்ப்பணித்துள்ளனர்.

இதுபற்றிய விரிவான தகவலை இந்த இருதய மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட பி.எஸ்.ஜி மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் பகிர்ந்த தகவலை காண்போம்:

அரசின் ஒத்துழைப்புக்கு நன்றி!

டாக்டர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன், இயக்குனர், பி.எஸ்.ஜி மருத்துவமனை

மதுரையில் நவம்பர் 15 ஆம் தேதி இரவு மூளைசாவு அடைந்த ஒருவரின் இருதயம் பி.எஸ்.ஜி மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு கொடையாக அளிக்கப்படுவதாக தமிழ்நாடு உறுப்புதான ஆணையத்தில் இருந்து எங்களுக்கு தகவல் கிடைக்கப் பெற்றது.

அதன் அடிப்படையில் எங்கள் மருத்துவர்கள் மதுரைக்கு சென்று மருத்துவம் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு பின்பு இருதயத்தை இங்கு எடுத்து வந்தனர். மதுரையில் இருந்து கோவை 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த தொலைவை 2 மணி நேரம் 35 நிமிடத்தில் சாலை மார்க்கமாக கடந்து இருதயத்தை மிகவும் பாதுகாப்பாக இங்கு கொண்டு வந்தனர். (2 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு மாலை 4.35 மணிக்கு ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு வந்தது)

தமிழக அரசாங்கம் அளித்த ஒத்துழைப்பு மற்றும் மருத்துவமனையின் பங்களிப்பினால் நோயாளிக்கு வெற்றிகரமாக இருதயம் பொருத்தப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

மேலும், இருதயத்தை கோவைக்கு எந்த தடையும் இன்றி வேகமாக எடுத்து வருவதற்கு  போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி கொடுத்த போக்குவரத்து காவல் துறையினரின் உதவிக்கு தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தார்.

பயணத்தில் ஏற்பட்ட சவால்!

மாற்று இருதயத்தை கோவைக்கு கொண்டு வர மதுரை சென்ற இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரதீப் இதில் உள்ள சவால்கள் குறித்து பகிர்ந்து கொண்டதாவது: இருதயத்தை ஒருவரின் உடலில் இருந்து எடுத்த பின்னர் அதை நான்கு மணி நேரத்திற்க்குள் வேறொருவரின் உடலில் பொருத்தி விடவேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால் அதன் செயல்திறன் குறைய ஆரம்பித்துவிடும் என்றார்.

பொதுவாகவே மதுரையில் இருந்து கோவை வர நான்கு மணி நேரம் ஆகும். ஆனால் நாங்கள் மிகவும் குறுகிய காலத்திற்குள் கோவை வந்து சேர்ந்தோம். இது மிகவும் சவாலான பயணமாக இருந்தது. இதற்கு பின்னால் ஒரு பெரிய குழுவே வேலை செய்தது. சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் இதுபோன்று எப்போதும் நடக்கும். ஆனால் கோவையிலும் தற்போது இது சாத்தியமாகியுள்ளது.

போக்குவரத்து காவல் துறையினருக்கு தகவல் அளித்த உடனேயே, அவர்கள் எங்களுக்கு அனைத்துவித ஒத்துழைப்பும் அளித்தனர். ஆம்புலன்ஸ் வரும் பாதையை முற்றிலும் வாகனம் இல்லாமல் சீரமைத்து உதவியதுடன், ஒவ்வொரு ஏரியாவிலும் எங்களை பின் தொடர்ந்து வந்தனர். மேலும் இதனை ஒருங்கிணைத்து, எந்த இடத்திலும் சிறு தவறு நிகழ்ந்து விடாமல் நடவடிக்கை எடுத்த ஒருங்கிணைப்பு குழுவின் செயல் பாராட்டுக்குரியது.

நான்கு அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், செவிலியர்கள் என ஒரு பெரிய குழுவின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த சிகிச்சை சாத்தியமாகியிருக்காது. தற்போது மாற்று இருதயம் பொருத்தப்பட்ட நோயாளி நலமாக உள்ளார் என்பதையும் தெரிவித்தார்.

உறுப்பு தானம் பற்றி அவர் தெரிவிக்கையில், மூளைசாவு அடைந்த நபரால் ஏழு உயிர்களை காப்பாற்ற முடியும் என்றும், அவர்களிடம் இருந்து மட்டுமே இருதயம், நுரையீரலை எடுத்து பிறருக்கு பொருத்த முடியும் என்றும் கூறினார். மேலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்றார்.

அதிகரிக்கும் இருதய செயலிழப்பு!

பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் அனந்தநாராயணன் இருதய செயலிழப்பு மற்றும் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் பற்றி கூறியதாவது:  நாங்கள் சிகிச்சை அளித்த பெண்மணிக்கு (வயது 53) பிறவிலேயே இருதய குறைபாடு இருந்துள்ளது. இந்தியளவில் இதுபோன்ற பிறவி இருதய குறைபாடு உள்ளவர்கள் முறையான சிகிச்சையை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால் நோயின் தீவிரம் அதிகமாகி இறுதி நிலை இருதய செயலிழப்புக்கு சென்று விடுகின்றனர்.

தற்போது இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அன்றாடம் இயல்பாக செய்யும் செயல்களை கூட இவர்களால் செய்ய முடியாது. சிறிய வேலைகளை செய்யும் போது கூட அதிக மூச்சு திணறல் ஏற்படும். வயதானவர்கள் மட்டுமல்லாமல் நடுத்தர வயதினர்கள் கூட இருதய செயலிழப்பால் பாதிப்படைகின்றனர். மேலும், குழந்தைகளிலும் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களுக்கான ஒரு நிரந்தர தீர்வாக இருதய மாற்று அறுவை சிகிச்சை உள்ளது.

இறுதி நிலை இருதய செயலிழப்பானது மாரடைப்பினால் மட்டுமல்லாமல் பலவகையான இருதய குறைபாடுகளாலும் ஏற்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு விரைவிலேயே திரும்பி விடலாம். முன்னர் செய்த வேலையை எந்த தடையின்றியும் தொடரலாம். அதேசமயம் குறிப்பிட்ட இடைவெளியில் தவறாமல் மருத்துவமனைக்கு வந்து மருத்துவரின் அறிவுரையை பெறுவது அவசியம் என்பதையும் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் இருதய செயல் இழப்பினால் பாதிப்படைவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை ஈடுசெய்ய போதுமான அளவு உறுப்புதானம் செய்பவர்களின் எண்ணிக்கையும் உயரவேண்டும். அதற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியமானது. தமிழகம் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவிற்கே ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பதோடு, அதிகமான இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மாநிலமாகவும் விளங்குகிறது. அதேசமயம் தமிழகத்தில் மாற்று இருதயம் வேண்டி அதிகமானோர் காத்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இருதய மாற்று அறுவை சிகிச்சையில் அறிவியல் சார்ந்த மேம்பாடு உடன், தொழில்நுட்ப மேம்பாடும் வளர்ந்து வருவதாகவும், உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ட்ரோன்கள் பயன்படுத்துவது குறித்த ஆய்வுகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். இதன்மூலம், எதிர்காலத்தில் தொழில்நுட்ப முன்னேறப்பாடுடன் இன்னும் பாதுகாப்பான முறையில் இருதய செயலிழப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறினார்.

சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு செல்வது அவசியம்!

கார்டியாக் கிரிட்டிகல் கேர் டாக்டர் சிவக்குமார் பேசியதாவது: இந்திய மக்கள் தொகையில் இருதய செயலிழப்பு மிகப்பெரும் சவாலாக உள்ளது. முன்பெல்லாம் மாரடைப்பு 40 முதல் 50 வயது உடையவர்களுக்கு ஏற்பட்டது. இப்போது நடுத்தர வயதினருக்கு கூட மாரடைப்பு ஏற்படுவதைக் காணமுடிகிறது.

இருதயத்தில் பாதிப்பு ஏற்பட்ட பின் சரியான நேரத்தில் மருத்துவமனையை அணுகாததால் முறையான சிகிச்சையை வழங்கினாலும், ஒருமுறை இருதயம் பலவீனமான பின் அவர்களுக்கு ஆயுள் குறைந்து விடுகிறது. உறுப்பு செயலிழந்த பின்பு மீண்டும் வாழ்வளிக்க வேண்டும் என்ற நிலையில், மாற்று சிகிச்சையே கைக்கொடுக்கிறது. நாங்கள் சிகிச்சை அளித்த நோயாளிக்கு சரியான நேரத்தில் இருதயத்தை பொருத்த துணையாக இருந்த அனைவரின் கூட்டு முயற்சிக்கும் நன்றி.

மூளைசாவு அடைந்த ஒருவரின் உடல் உறுப்புகளை தானமாக அளிப்பதற்கு முன்வருவது மிகப்பெரிய செயல். இந்தியளவில் இருதயம் வேண்டி 600 பேரும், தமிழக அளவில் 100 பேரும் காத்திருக்கின்றனர்.

நோயாளி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என முடிவெடுத்த பின்னர், சிகிச்சை எடுக்கும் மருத்துவமனைக்கு அருகிலேயே இருப்பது அவசியம். உறுப்பு தானமாக கிடைக்கும் பட்சத்தில் நோயாளி வெளியூர் போன்ற இடங்களில் இருந்தால் அழைத்த உடன் வருவது இயலாத ஒன்றாக இருக்கும். மேலும், மாற்று அறுவை சிகிச்சை முடிந்த பின்னரும் 4 மாதங்களாவது மருத்துவமனை அருகிலேயே நோயாளி இருந்தால், திடீரென ஒரு அவசர நிலையின் போது மருத்துவரை எளிதில் அணுகமுடியும் என்பதை குறிப்பிட்டு பேசினார்.

ஒருங்கிணைந்த வெற்றி

வெற்றிகரமாக பொருத்தப்பட்ட இருதயத்தை எந்த சிக்கலும் இன்றி உரிய இடத்திற்கு, குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்து வர அனைத்தையும் ஒருங்கிணைத்து வழிநடத்தியதில் ஒருங்கிணைப்பாளர்களின் பங்கு முக்கியமானது.

காவல்துறைக்கு முன்னேரே தெரியப்படுத்தி, சாலை போக்குவரத்தில் எந்தவித சிக்கலும் வராத வண்ணம் மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் புறப்பட்டதில் இருந்து கோவை வந்து சேரும் வரையிலான காலத்தை பி.எஸ்.ஜி மருத்துவமனையின் உறுப்புதான ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு சரியாக கையாண்டார் என்பதையும் மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.