ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு தற்காப்புக்கலைப் பயிற்சி

தற்போது பெண்களின் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. சிறு குழந்தைகள் முதல் மூதாட்டி வரை அத்துமீறல்களையும் தாக்குதல்களையும் சந்தித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள உயர் பதவிகள், பட்டங்கள் என வெற்றிகளை வசப்படுத்தி வரும் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது பற்றிக் கற்றுக் கொள்வது காலத்தின் தேவை என்பதால் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 500 பேருக்கு மூன்று மாதப் பயிற்சியாக 30 மணி நேரம் தற்காப்புக்கலைப் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி முடிவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை மாநகர சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் மதிவாணன் கலந்துகொண்டு பயிற்சியில் கலந்து கொண்ட மாணவிகளைப் பாராட்டினார். இதில் உடற்கல்வி இயக்குநர் ஜாய்சி கலந்துகொண்டார்.

இது குறித்துக் கல்லூரி முதல்வர் சித்ரா கூறும்போது: பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் அளவு உடலளவிலும், மனதளவிலும் வலிமை உடையவர்களாக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் திறமை மிக்கவர்களாக முடியும். அதனால்தான் எங்கள் கல்லூரி மாணவிகளுக்குத் தற்காப்புக்கலைப் பயிற்சியளிக்கப்பட்டது.

அவர்களில் சிறப்பாகப் பயிற்சிகளை மேற்கொண்ட 14 முதல்தர மாணவிகள் உட்பட 52 பேர் சிறப்பிடம் பெற்றனர். பயிற்சியில் ஈடுபாடு, தொடர் பயிற்சி உள்ளிட்ட பல பிரிவுகளில் சிறந்த 3 மாணவிகள் பாராட்டப்பட்டனர்.

கல்லூரி மாணவிகளின் மத்தியில் உடல் நலம் பேணும் அக்கறையும், உடல் வலிமையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கச் செய்யும் இந்தப் பயிற்சியை ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.