பி.எஸ்.ஜி மருத்துவமனையில் ‘இன்சுவை இயற்கை சுவை’ உணவகம் திறப்பு

இன்சுவை இயற்கை சுவை என்ற ஆரோக்கியம் சார்ந்த உணவகம் 5 வது தேசிய இயற்கை மருத்துவ தினத்தன்று பி.எஸ்.ஜி மருத்துவமனையில் துவங்கப்பட்டது.

வெள்ளை உணவு பொருட்களான மைதா, வெள்ளை ரவை, வெள்ளை சீனி, பால், பால் பொருட்கள் இந்த உணவகத்தில் தவிர்க்கப்படுகின்றன. எண்ணெய் மற்றும் காரம் குறைவாகவும் நம் வீட்டு முறைப்படி உணவு பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. செயற்கை மனமூட்டிகளோ அல்லது வண்ணங்களோ அறவே இல்லை. குடிப்பதற்கு இயற்கை குளிர்ந்த குடிநீரும் அளிக்கப்படுகிறது.

‘ஆரோக்கியத்தை தேடி’ என்ற வகையில், இம்முயற்சி நோயாளிகள் மட்டுமல்லாமல் மருத்துவர்கள் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனையில் பணிபுரியும் அனைவரின் கவனத்தையும் இந்த பாரம்பரிய இயற்கை உணவகம் வெகுவாக கவர்ந்தது.

முளைகட்டிய நிலக்கடலை சாலட், உளுந்தங் கஞ்சி, கொள்ளு சூப், சோளப் பணியாரம் போன்ற பாரம்பரிய இயற்கை உணவு பதார்த்தங்கள் இங்கு அளிக்கப்படும் உணவு பட்டியலில் இடம்பெற்றுள்ளன. உணவு ஆலோசகர்களின் உதவியுடன் இயற்கை மற்றும் யோகா மருத்துவரான டாக்டர் சுபாஷினி சங்கர் கணேஷ் இந்த உணவு பட்டியலை வடிவமைத்தார்.

உணவகத்தின் திறப்பு விழாவிற்கு பி.எஸ்.ஜி.ஐ.எம் இயக்குனர் ஸ்ரீ வித்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மருத்துவமனையின் இயக்குனர் புவனேஸ்வரன், மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.