ஏமாற்றி பெரும் வெற்றியை விட தோல்வி மேலானது

– ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன்

கோவை நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நேரு குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் வழக்கறிஞர் கிருஷ்ணதாஸ் தலைமை தாங்கினார்.

பேராசிரியர் ஹேமாமாலினி வரவேற்புரை ஆற்றினார். நேரு கல்விக் குழுமத்தின் செயலாளர் கிருஷ்ணகுமார் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன் மற்றும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விநாயகம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

முன்னாள் நீதிபதி முகமது ஜியாவுதீன் சிறப்புரை ஆற்றும் போது: மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை கல்லூரியில் பாடங்களைப் படிப்பதில் மட்டுமல்ல நல்ல நடத்தைகளை கற்றுக்கொள்வதிலும், ஒழுக்கத்துடன் வாழப் பழகுவதிலும் இருக்கிறது.

பிளஸ் 2 வரை மாணவர்கள் சொந்த கிராமத்தில் படிக்கிற வாய்ப்பு இருக்கும். ஆனால் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலிருந்தும் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் பழகுகிற வாய்ப்பு கிடைக்கும்.

அதன் மூலம் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். நல்ல நண்பர்களை பெற்றவர்கள் வாழ்க்கையில் தோற்க மாட்டார்கள். எவ்வளவு நபர்களோடு பழகினாலும் தங்கள் சுயத்தை இழக்காமல் இருக்க வேண்டும். பொறியியல் கல்லூரிகளில் படிப்பவர்கள் வகுப்புகளை கவனிப்பதும் அதனை ஒட்டிய பயிற்சிகளை தவறாமல் மேற்கொள்வதும் அவசியம்.

குறிப்பாக கல்லூரி வாழ்க்கையில் எவ்விதமான தீய பழக்கங்களுக்கும் ஆட்படாமல் இருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடப்பவர்கள் வெற்றி பெற முடியாது. முகநூலில் ஆயிரம் நண்பர்கள் இருப்பதில் பயன் இல்லை. எப்போதும் துணையாக இருக்கும் நல்ல நண்பன் கிடைப்பதுதான் சிறந்தது. இளைஞர்களை சீரழிக்க மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும் போதையில் இருந்து இளைஞர்கள் விடுபட்டு இருக்க வேண்டும்.

சமூக ஊடகங்களின் மூலம் வருகிற தொடர்புகளில் ஆண்களும் பெண்களும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அடையாளம் தெரியாதவர்களோடு பழகி அதன் மூலம் ஆபத்துகளில் சிக்கி நல்ல வாழ்க்கையை இழந்தவர்கள் வெளிவர முடியாமல் தற்கொலை செய்தவர்கள் இருக்கிறார்கள்.

தெரியாமல் ஏதாவது தவறுகள் நடந்தாலும் அதனை உடனடியாக பெற்றோர்களிடம் பரிமாறிக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகள் பேசுவதை கேட்கும் மனநிலையில் இருக்க வேண்டும். அதற்கான நல்ல தீர்வை வழங்க வேண்டும். அப்படி இருந்தால் குழந்தைகள் எவ்விதமான தவறான முடிவும் எடுக்க மாட்டார்கள்.

ஆசிரியர்கள் பாடம் நடத்துவதோடு நேர்மையை, உண்மையை, அன்போடு இருக்கிற பழக்கத்தை சொல்லித் தர வேண்டும். பொறாமை இல்லாத மனநிலையும், புத்தகங்கள் வாசிப்பதையும், இயற்கையை ரசிப்பதையும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

ஏமாற்றி வெற்றி பெறுவதை விட தோல்வி அடைவது மேலானது என்பதையும், மற்றவர்கள் பேசுவதை கவனிக்க வேண்டும் என்பதையும், பொய்யான புகழுறையில் மயங்காமல் இருப்பதையும், கண் முன்னால் தவறுகள் நடக்கும் போது தட்டிக் கேட்கிற துணிச்சலையும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

கற்றல் என்பது முடிவில்லாத பயணம். வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொள்ளும் மன நிலையை வளர்த்துக் கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் என்று பேசினார்.

கல்லூரியை பற்றி முதல்வர் மணிஅரசன், இயக்குனர் மோகன்குமார் ஆகியோர் உரையாற்றினர்.
இயக்குனர் முரளிதரன், இளமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.