“இளம் பருவத்திலேயே நன்னெறிகளை வளர்த்துக் கொள்ளுங்கள்”

– கவிதாசன்

சச்சிதானந்த பள்ளியில் குழந்தைகள் தின விழா

இளம் பருவத்தில் குழந்தைகள் நன்னெறிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு ஆசிரியர்களே முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர் என சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா கொண்டாட்டத்தில் பள்ளியின் செயலரும், சிந்தனை கவிஞருமான கவிதாசன் கூறினார்.

நிகழ்ச்சியில் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் உருவப்படத்திற்குப் பள்ளிச் செயலர் கவிதாசன், கல்வி ஆலோசகர் கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் மற்றும் மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், இறைவணக்கப்பாடல், தமிழ் நாடகம், ஆங்கில நாடகம், வில்லுப்பாட்டு, நடனம் ஆகியனவற்றில் ஆசிரியர்கள் பங்குபெற்று பள்ளிக் குழந்தைகளை மகிழ்வித்தனர்.

நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற பள்ளிச் செயலர் தனது வாழ்த்துரையில்: நம் பாரத நாட்டின் முதல் பிரதம மந்திரியான பண்டிட் ஜவஹர்லால் நேரு, குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவரைப் போலவே நம் பள்ளியின் நிறுவனர் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளும் குழந்தைகள் மீது பற்று கொண்டிருந்தார்.

இளம் பருவத்தில் குழந்தைகள் நன்னெறிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஆசிரியர்களே முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். குழந்தைகள் அனைவரும் அறிவுத்திறனோடும். கலைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கிலேயே நம் பள்ளி ஆசிரியர்கள், கலை நிகழ்ச்சியினை நடத்தியுள்ளனர். ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டுகின்றேன். குழந்தைகள் அனைவருக்கும் நிர்வாக அறங்காவலர் ராமசாமி சார்பாகவும், எனது சார்பாகவும் “குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.