குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி கோவையில் பின்நோக்கி நடந்து விழிப்புணர்வு

குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் வண்ணம் நடைபெற்ற பேக்கத்தான் பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பின்நோக்கி நடந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கோவை வ.உ.சி பார்க் கேட் பகுதியில் இந்த பேக்கத்தான் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதனை யங் இந்தியன்ஸ் என்ற அமைப்பு நடத்தியது. இதில் 8 தனியார் கல்லூரியின் மாணவர்கள், சுமார் 1000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பின்நோக்கி நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் யங் இந்தியன்ஸ் அமைப்பின் கோவை கிளை தலைவர் ஸ்ரீகுமார் மற்றும் மாசும் திட்டத்தின் தலைவர் ராஜலஷ்மி விஷ்ணு முன்னிலை வகித்தனர்.

இந்த பேரணியானது குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்களில் இருந்து பாதுகாப்பு ஏற்படுத்திட வலியுறுத்தி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளின் பாதுகாப்பிற்காக இதுபோன்று பின் நோக்கி நடக்கும் பேரணி மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.